சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலத்தில் 700 ஏக்கர் பரப்பில் ரெட்டேரி அமைந்துள்ளது. நீர்வளத்துறைக்கு சொந்தமானதுதான் இந்த ஏரி. ஆனால் அரசின் அலட்சியப் போக்கினால் யார்யாரோ வந்து ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள். இந்த ரெட்டேரிதான் புழல், கதிர்வேடு, விநாயகபுரம், மாதவரம், கொளத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளின் நிலத்தடி நீரின் ஆதாரமாக இருந்து வருகிறது.
நீர்வளத்துறையின் அலட்சியப் போக்கு!
நீர்வளத்துறையின் அலட்சியப் போக்கின் காரணமாக கொளத்தூர் அடுத்து உள்ள லட்சுமிபுரம் சந்திப்பு முதல், புழல் எம்.ஜி.ஆர் நகர் வரையிலான கரைப் பகுதி சேதமடைந்துள்ளது. இதனை சரிசெய்ய அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் நீர் வழிக் கால்வாய்கள் என, பல ஏக்கர் பரப்பு இடம், தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. இதைத் தவிர கடை, வீடுகள் என்று இருநூறுக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் நிரந்தரமாகியுள்ளது. இந்நிலையில் மாதவரம் மண்டலம் 30வது வார்டுக்கு உட்பட்ட திருமால் நகரை ஒட்டி, ஏரியை ஆக்கிரமித்து புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதையொட்டி நீர் வரத்து கால்வாயிலும் கட்டட இடிபாடுகள் கொட்டப்பட்டு, ஆக்கிரமிப்பிற்கு தயாராகி வருகிறது.
துணைபோகும் அதிகாரிகள்..!
மாநகராட்சி பகுதி என்பதால் அதிகாரிகளும் இந்த ஆக்கிரமிப்பிற்கு துணைபோகின்றனரா என்ற கேள்வியும் நமக்குள் எழுந்துள்ளது. மின் இணைப்பு, சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எளிதில் கிடைக்குமென ஆக்கிரமிப்பாளர்கள் ஒருவேளை துணிந்து இந்த செயலில் இறங்குகின்றனரோ? துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுபோன்ற சட்டவிரோத செயலுக்கு துணைபோவதை துறை சார்ந்த அமைச்சர் துரைமுருகன் கண்டும் காணாதுபோல விட்டுவிடுகிறாரோ போன்ற சந்தேகங்களும் எழாமல் இல்லை.
இப்பகுதியில் அறுநூறு சதுர அடி இடமானது 7 லட்சத்திலிருந்து 8 லட்சம் ரூபாய் வரை விற்பனையாவதாக கூறப்படுகிறது. திருமால் நகர் அருகே உள்ள நேரு நகரையொட்டி, ஆக்கிரமிப்புக்காக ஏரிக்குள் கொட்டப்பட்ட கட்டட இடிபாடுகள் பொதுமக்கள் எதிர்ப்பின் காரணமாக அடுத்தநாளே அகற்றப்பட்டன.
கழிவுகளில் இருப்பிடமாகும் ஏரி..!
இந்தப் பகுதியை மட்டும் சேதப்படுத்தாமல் பலவீனமான ஏரிக்கரையை சேதப்படுத்தி, கட்டட இடிபாடுகள் உள்ளிட்டவற்றை கொட்டி, ஆக்கிரமிக்கும் வேலைகளும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. நேரு நகர், வளர்மதி நகர் ஆகியவற்றையொட்டி, அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு மாநகராட்சி அமைந்துள்ள சாலை, இந்த ஆக்கிரமிப்பாளர்களுக்கு வசதியாக உள்ளது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனைத் தவிர, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் வசிக்கும் மக்கள் வெளியேற்றும் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள் என்று தொடர்ந்து வெளியேற்றப்படும் கழிவுகள் எல்லாம் இந்த ஏரியில் கலக்கப்படுகிறது.
பாதிக்கும் சுற்றுச்சூழல்… அமைதி காக்கும் திமுக..!
டேங்கர் லாரிகளில் எடுத்து வரப்படும் கழிவுநீரும், புழல் எம்.ஜி.ஆர் நகர் அருகே ரெட்டேரிக்குள் விடப்படுகிறது. இதனால், ஏரியின் பரப்பு குறைந்து சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. “நீர்நிலை ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும் என்ற உத்தரவை நீர்வள ஆதாரத்துறை இதுவரை ரெட்டேரியில் செயல்படுத்த முயற்சிக்கவில்லை. மற்றொரு புறம் ஏரியின் பரப்பு சுருங்கி மழைநீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது. அதனால் ஒவ்வொரு ஆண்டும் பருவ மழையின் போது, இந்தப் பகுதிகளில் இருந்து பல லட்சம் கன அடி நீர் வெளியேறி கடலில் வீணாக கலக்கிறது.
இதனைக் கண்டும் காணாமல் இருக்கும் அரசு மூன்று ஏரிகளை சுற்றுலாத் தலமாக வேறு மேம்படுத்துவதாக கூறியிருக்கிறது. அவையாவன, மாதவரம் ரெட்டேரி, கொரட்டூர் ஏரி, அம்பத்தூர் ஏரி ஆகும். இது அதிமுக ஆட்சிகாலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதாலேயே இந்த விடியா திமுக அரசு முடக்கிவைத்திருக்கிறது என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அன்றைக்கு முதல்வராக இருந்த புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி, 85 கோடி ரூபாயில் நடைமேடை, பூங்கா, பறவைகள் சரணாலயம், படகு குழாம் என பல்வேறு சிறப்பு அம்சங்களை உருவாக்க 2015ல் அறிவிப்பாணை வெளியிட்டார். முதற்கட்டமாக 20 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் 2015 மார்ச் மாதம் மேம்பாட்டு பணியும் தொடங்கப்பட்டது. அப்போது இதற்காக சில ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆனால் தற்போது திமுக ஆட்சியில் இந்த ஆக்கிரமிப்பானது தொடர்ந்த வண்ணம் உள்ளது.
நீதிமன்ற உத்தரவு…!
“நீர்நிலை மற்றும் நீர்வழித்தடங்களின் ஆக்கிரமிப்புகளுக்கு உடந்தையாக இருப்பவர்களின் மீது, குற்றவியல் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் 2022ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மாதவரம் ரெட்டேரி ஆக்கிரமிப்புகளை தமிழக அரசு பாரபட்சமின்றி அகற்றி, நிலத்தடி நீர் ஆதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும். மேற்கொண்டு ஏரியை சுற்றுலா தலமாக்கினால் ஆக்கிரமிப்புகள் தடுக்கப்படும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஆனால் இதனை விடியா திமுக அரசு கண்டுகொள்ளாமல் இருந்ததன் விளைவே இந்த ரெட்டேரி பிரச்சினைக்குள்ளாகியிருப்பதன் பின்னணி ஆகும். இதனை முதலிலே கவனித்திருந்தால் சுற்றுச்சூழல் பாதிப்பினை இந்த அளவிற்கு கொண்டுபோகாமல் தவித்திருக்கலாம். நீர்வளத்துறையும் அதன் அமைச்சருமான துரைமுருகனும் உறங்கிக்கொண்டிருக்கிறார்களா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.