சென்னை போரூர் அருகே கார் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 100க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் எரிந்து சேதமடைந்தன.
போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை அருகே தனியார் கால் டாக்ஸி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. கடந்த சில மாதங்களாக செயல்பாடு இன்றி உள்ளதால், அந்த நிறுவனத்தில் அட்டாச் செய்யப்பட்ட 250க்கும் மேற்பட்ட கார்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் அங்கு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் நுற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்கப் போராடினர். அப்பகுதியில் புல்வெளிகள் நிறைந்துள்ளதால் தீயைக் கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது. தீயை அணைக்க பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர், கோயம்பேடு பகுதிகளிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த தீ விபத்தினால் சென்னை, பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தீ விபத்தினால் ஏற்பட்ட கரும்புகை காரணமாக மருத்துவமனை நோயாளிகளும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.