சென்னையில் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கான அனுமதியைப் பெற ஒற்றைச்சாளர முறையை மாநகர காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை வைப்பவர்கள் காவல்துறை, தீயணைப்பு மீட்புப் பணித்துறை, மாநகராட்சி, மின்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றுக்கு நேரடியாகச் சென்று முறையாக ஒவ்வொருவரிடமும் அனுமதி பெற்ற பின்னரே சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் விநாயகர் சிலை வைப்பவர்கள் மிகுந்த சிரமத்துக்கும், இன்னலுக்கும் உள்ளாகினர். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலை வைப்பவர்கள் ஒவ்வொரு துறைக்கும் சென்று தனித்தனியாக அனுமதி பெறவேண்டியதில்லை.
ஒற்றைச்சாளர முறையில் ஒவ்வொரு காவல் மாவட்டத்துக்கும், காவல் ஆய்வாளர் தகுதியில் உள்ள ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதால், அவரிடம் மனு அளித்தால் போதுமானது. அந்த அதிகாரி மற்ற துறைகளிடம் இருந்து பெற வேண்டிய அனுமதியைப் பெற்று சிலை வைப்பவர்களுக்கு வழங்குவார். விநாயகர் சிலைகளை நிறுவ உள்ள அமைப்புகள், ஆகஸ்டு 22ஆம் தேதிக்குள் அந்தந்தப் பகுதியில் உள்ள காவல் ஆய்வாளர்களிடம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.