அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கைவிடப்பட்ட பூங்கா..வரிப்பணம் வீணாவதாக மக்கள் வேதனை!

காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட பூங்காவை பராமரிக்காமல் வைத்துள்ளதாக பொதுமக்கள் புகார்… சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வரும் பூங்கா குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

அஇஅதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட இந்த பூங்காவை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பராமரிப்பின்றி விட்டு வைத்துள்ளது விடியா திமுக அரசு. பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால் இந்த பூங்கா தற்போது சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது…

சென்னை மணலி அடுத்த மாத்தூர் இரண்டாவது பிரதான சாலையில் உள்ள 19 வது வார்டில் மூன்று ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்கா அதிமுக ஆட்சியில் பல லட்சங்கள் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது. சிறுவர்களுக்கான விளையாடும் மைதானம், ஸ்கேட்டிங் மைதானம், நடைபயிற்சி பாதை உள்ளிட்டவையுடன் நல்ல முறையில் இயங்கி வந்தது.

இந்நிலையில், விடியா ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஒப்பந்ததாரர் மாறியதாக கூறி கண்டுகொள்ளாமல் விடப்பட்ட இந்த பூங்கா தற்போது சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. பூங்காவுக்கு அருகே டாஸ்மாக் கடை இருப்பதால் சரக்கு பாட்டில், கஞ்சா, போதைப் பொருள்கள் சகிதம் இரவு நேரத்தில் பூங்காவுக்குள் தஞ்சம் அடையும் சமூகவிரோதிகள், பெண்களையும் அழைத்து வந்து தவறான செயல்களில் ஈடுபடுவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அதிமுக ஆட்சியில் கட்டி நல்ல முறையில் பராமரிக்கப்பட்ட பூங்காவை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக விடியா அரசு கண்டுகொள்ளாமல் விட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றி, பூங்காவையும் முறையாக பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

– செய்தியாளர் எழிலரசன் மற்றும் சித்தார்த்.

Exit mobile version