மருத்துவ அறிவியல் படிப்புகளில் எதிர்காலத்தில் அதிக அளவிலான வேலை வாய்ப்புகள் காத்திருப்பதாக சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.
தேசிய கல்வியியல் தரவரிசை கட்டமைப்பு நடத்திய ஆய்வில் இந்தியாவில் தலைசிறந்த கல்வி நிறுவனமாக எட்டாவது ஆண்டாக சென்னை ஐஐடி தேர்வு செய்யப்பட்டு நேற்று விருதுகள் வாங்கியதையொட்டி, இன்று சென்னை ஐஐடி வளாகத்தில் இயக்குனர் காமகோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், சென்னை ஐஐடியில் வேலை வாய்ப்பு தரும் படிப்புகளில் மாணவர்களுக்கு கற்றல் திறனை அதிகரித்து அவற்றுக்கான பாதையில் சென்னை ஐஐடி தொடர்ந்து இயங்கி வருவதாக தெரிவித்தார். அந்த வகையில் இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்த உள்ள மருத்துவ அறிவியல் படிப்புக்கு அதிக அளவிலான விண்ணப்பங்கள் வந்திருப்பதாகவும், எதிர்காலத்தில் மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கு வேலை வாய்ப்புகள் அதிக அளவில் இருப்பதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் தரமான கல்வி அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில் கிராமப்புறங்களிலும் ஐஐடி நடத்தப்படும் படிப்புகள் குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவதாக கூறினார். குறிப்பாக பி.எஸ். டேட்டா சயின்ஸ், பி.எஸ். எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் என்ற இரு பிரிவுகள் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இவற்றிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் சேர்வதற்கு விண்ணப்பித்து வருவதாகவும் கூறினார். மேலும் மன அழுத்தத்தை எப்படி எதிர்கொள்வது என்ற வெல்னஸ் நிகழ்ச்சியும் தொடர்ந்து நடத்தி வருவதாகவும் கூறினார். மாணவர் தற்கொலை தடுப்பது குறித்தும், மாணவர் தற்கொலை செய்து கொண்டது குறித்தும் விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற டிஜிபி திலகவதி ஐபிஎஸ் அவர்களது அறிக்கை இதுவரையில் எங்களிடம் சமர்ப்பிக்கவில்லை என்றும் காமகோட்டி கூறினார்.
சென்னை ஐஐடி யில் நிலவும் சாதியபாகுபாடுகள் குறித்து இதுவரை எந்த புகாரும் எனக்கு வரவில்லை என்றும், யாரேனும் பாதிக்கப்பட்டால் நேரடியாக என்னிடமே புகார் அளிக்கலாம் என்றார் அவர். மேலும் உலகிலேயே முதல்முறையாக தான்சானியா நாட்டில் சென்னை ஐஐடி கிளை தொடங்க இருப்பதாகவும், இயக்குனர் காமகோட்டி கூறினார்.