கலாஷேத்ரா நடனப்பள்ளியில் பாலியல் ரீதியான புகார்கள் எழுந்த நிலையில் அங்கு மாணவர்களின் தொடர் போராட்டங்கள் நடைபெற்று பின்பு வாபஸ் பெறப்பட்டது. தற்போது மாணவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட உதவி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாதவரத்தில் நண்பர் வீட்டில் பதுங்கி இருந்தபோது அடையாறு அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர். சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா நடன பள்ளி பாலியல் புகார் தொடர்பாக கேரளாவை சேர்ந்த அப்பள்ளியின் 2019 ஆம் ஆண்டு நடனம் பயின்ற முன்னாள் மாணவி சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் ஒன்றினை அளித்தார்.
இந்தப் புகாரில், தான் நடனம் பயின்ற பொழுது நடனப் பள்ளியின் உதவி ஆசிரியர் ஹரி பத்மன் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குறிப்புகளில் தெரிவித்து இருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 3 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் புகார் அளித்த கேரளாவை சேர்ந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொள்வதற்காக சென்னை அடையாறு உதவி ஆணையர் நெல்சன் தலைமையிலான அனைத்து மகளிர் காவல் நிலைய தனிப்படை போலீசார் கேரளா மாநிலத்திற்கு விரைந்துள்ளனர்.
மேலும் புகார் அளிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட பின்னர் நடனப்பள்ளியின் உதவி ஆசிரியர் ஹரி பத்மன் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகும் படியும் சமன் அனுப்பிய நிலையில் ஆஜராகாததால் ஹரி பத்மனை போலீசார் தேடி வந்த நிலையில் மாதவரத்தில் அவரது நண்பர் வீட்டில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.