சென்னை கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் கலாஷேத்ரா கல்லூரி ஏப்ரல் 6ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவான்மியூரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் கலாஷேத்ரா கல்வி நிறுவனத்தில் பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக சமூக வலைத்தளங்களில் மாணவிகள் குற்றசாட்டுகளை எழுப்பினர். இதையடுத்து , தமிழ்நாடு காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் கலாஷேத்ராவை சேர்ந்த பாதிக்கப்பட்ட மாணவி என கூறப்படும் பெண், பேராசிரியர் மீது அளிக்கப்பட்ட பாலியல் புகாரில், தனது பெயரை தவறாக பயன்படுத்தியுள்ளதாக மனு அளித்திருந்தார். இந்த மனுவின் அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம் காவல்துறை விசாரணைக்கான உத்தரவை வாபஸ் பெற்றது. இதனால் அதிருப்தியடைந்த மாணவ மாணவிகள், சம்பந்தப்பட்ட ஆசிரியர் நீண்டகாலமாக பணியாற்றிவருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க நிர்வாகம் தயங்குவதாக குற்றச்சாட்டி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, கலாஷேத்ரா கல்லூரிக்கு ஏப்ரல் 6ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post