இந்தியாவில் முதன்முறையாக சென்னை சுயாதீன திரைப்பட விழா

பொதுமக்கள் நிதியில் நடத்தப்படும் இந்தியாவின் முதல் சுயாதீன திரைப்பட விழா குறித்த ஒரு செய்தி தொகுப்பினை தற்போது பார்க்கலாம்.

சாதாரணமாக திரைப்படங்களை, ஒரு தயாரிப்பாளரைக் கொண்டே உருவாக்குவார்கள். ஆனால், பொதுத்துறை நிறுவனங்கள் போல், பொதுமக்களின் நிதியை பெற்று உருவாக்கப்படும் திரைப்படங்களை காட்சிப்படுத்த, சுயாதீன திரைப்பட விழா கொண்டாடப்படுகிறது.தமிழ் ஸ்டூடியோ சார்பில் நடத்தப்படும் சென்னை சுயாதீன திரைப்பட விழா, இந்தியாவிலேயே முதன்முறையாக, சென்னை சாலிகிராமத்தில் கடந்த 8 ம் தேதி தொடங்கியது. இந்த விழாவில் திரைப்படங்கள் திரையிடுவது மட்டுமின்றி, பயிற்சிப் பட்டறைகள், மாஸ்டர் க்ளாஸ், கலந்துரையாடல் நிகழ்ச்சி உள்ளிட்டவைகளும் நடைபெற்றது.

விழாவின் தொடக்கமாக, எது வர்த்தக சினிமா, எது சுயாதீன சினிமா என்பதை விளக்கும் வகையில், தப்பாட்ட கலைஞர்களும், சிலம்பாட்ட வீரர்களும் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

விழாவில் உலக புகழ் பெற்ற திரைப்பட படைப்பாளிகளின் ஒவியங்களும், பத்து ரூபாய் விலையில் திரைப்பட தொழில் நுட்பத்தை சொல்லித்தரும் புத்தகங்களும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. 3 நாட்கள் நடைபெற்ற விழாவில், 12 மாநிலங்கள், நான்கு நாடுகளைச் சேர்ந்த இயக்குநர்களின் சுயாதீன படங்கள் திரையிடப்பட்டன. இந்த விழாவின் தொடக்க படமாக முதல் நாளில் போன்ஸ்லே என்ற திரைப்படம் திரையிடப்பட்டது.

ஒரு திரையரங்கரத்தில் இருந்து இன்னொரு திரையரங்கம் செல்லும் வகையில் தமிழ் ஸ்டுடியோ, வாகன வசதியும் ஏற்பாடு செய்திருந்தது. திரைப்பட உலகில் பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டு வரும் நிலையில், அதேபோன்ற ஒரு முயற்சியாக, இந்த சுயாதீன திரைப்பட முயற்சியில் இறங்கியுள்ளனர். இது எந்த அளவிற்கு வெற்றிகரமாக அமையும் என்று வரும் காலங்களில் தெரியும்…..

Exit mobile version