தமிழகம் முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அனுமதியின்றி நடைபெறும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வரக்கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரக் கோரி கண்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார். தொடர் போராட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாக மனுவில் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அனுமதியின்றி நடைபெற்று வரும் போராட்டங்கள் மீது காவல்துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நீதிமன்ற உத்தரவிற்காக ஏன் காத்திருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அனுமதியின்றி நடைபெற்று வரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து, தமிழக அரசு மற்றும் டிஜிபி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு அடுத்த விசாரணையை மார்ச் 13-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.