தேசியக் கொடி அவமதிப்பு வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்பிணை வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசியக்கொடியை அவமதிக்கும் வகையிலும், முதலமைச்சரின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசி நடிகர் எஸ்.வி.சேகர் காணொலி வெளியிட்டிருந்தார். சமூக ஊடகங்களில் அந்த காணொலி பரவலாகப் பகிரப்பட்டது. இதையொட்டி எஸ்.வி.சேகருக்கு எதிராக சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில், தேசியக்கொடியை அவமதித்ததற்காக சேகர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், தான் கைதுசெய்யப்படலாம் என்ற அச்சத்தால் சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்பிணை கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில், சேகர் மன்னிப்புக் கேட்டால் அவரைக் கைதுசெய்ய மாட்டோம் என்று சென்னை காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், தன் வாழ்நாள் முழுவதும் இனி ஒருபோதும் தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன் என்றும் உத்தரவாத மனுவை சேகர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சேகர் தெரிவித்த வருத்தத்தை ஏற்றுக்கொள்வதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து,
காவல்துறையினரின் விசாரணைக்கு தேவைப்படும்போது ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் சேகருக்கு உயர்நீதிமன்றம் முன்பிணை வழங்கியது.