நக்கீரனுக்கு எதிரான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடாது – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நக்கீரன் கோபாலுக்கு எதிரான வழக்கில் வரும் 21-ம் தேதி வரை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த முன்னாள் பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் நக்கீரன் பத்திரிகையில் தொடர்ந்து செய்தி கட்டுரைகள் வெளியானது. இதுதொடர்பாக ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகாரையடுத்து நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கில் நக்கீரன் இணையாசிரியர் லெனின் உள்ளிட்ட 35 ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தங்களுக்கு தொடர்பும் இல்லை என்றும் தங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறி நக்கீரன் ஊழியர்கள் பொன்னுசாமி உள்ளிட்ட 9 பேர் உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் வரும் 21-ம் தேதிவரை இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

வழக்கு தொடர்பாக தமிழக அரசு சார்பில் தொடரப்பட்டுள்ள மேல்முறையீடு வழக்கோடு சேர்த்து இந்த வழக்கும் விசாரிக்கப்படும் என்று தெரிவித்த நீதிபதி வழக்கு விசாரணையை 21-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

Exit mobile version