சைபர் குற்றங்களை தடுக்க ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் தமிழக அரசுக்கு உதவும் வகையில், அரசு கேட்கும் தகவல்களை வழங்குவது குறித்து ஆலோசித்து விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூக வலைதளத்தில் குற்றங்களில் ஈடுபடுபவர்களை எளிதில் அடையாளம் காண, சமூக வலைதள கணக்குகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரி ஆண்டனி கிளமென்ட் ரூபன் என்பவர் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு கேட்கும் தகவல்களை தருவதில் உள்ள சிரமம் குறித்து சமூக வலைதள வழக்கறிஞர்களிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான தகவல் தொழில்நுட்ப துறை வல்லுனரும், ஐஐடி பேராசிரியருமான மதுசூதனன், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் தனியார் நிறுவனங்கள் வரிசையில் வரும் நிலையில், இந்த தனியார் நிறுவனங்கள் இந்தியாவில் இயங்கும் போது, அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு தான் செயல்பட வேண்டும் என்றும், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துபவர்கள் குறித்த தகவல்களை சமூக வலைதள நிறுவனங்களால் அரசுக்கு வழங்க முடியும் என தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு கேட்கும் தகவல்களை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து, வாட்ஸ்அப், ஃபேஸ்புக் நிறுவனங்கள் தொழில்நுட்ப வல்லுனர்களுடன் ஆலோசித்து விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டதுடன், வழக்கை ஆகஸ்ட் 21ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.