மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இருவரின் விடுதலையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வந்தவர்கள், நாகராஜ் மற்றும் புகழேந்தி. இவர்கள், தங்களிடம் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, மாணவிகளின் பெற்றோர் அளித்த புகார்களின் அடிப்படையில், இருவர் மீதும் செங்கல்பட்டு டவுன் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த செங்கல்பட்டு நீதிமன்றம், குற்றச்சாட்டுக்களுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி, கடந்த 2018 ஆம் ஆண்டு, அவர்களை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. ஆனால் மாணவியின் பெற்றோர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
உயர்நீதிமன்ற நீதிபதி விசாரணையில், பாலியல் தொல்லை சம்பந்தப்பட்ட வழக்குகளில், பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியமே போதுமானது என தெரிவித்தனர். மேலும், செங்கல்பட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து, குற்றவாளிகள் இருவரையும் பிப்ரவரி 25ம் தேதி ஆஜர்படுத்தும்படி, காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளனர்.