இரயில் பயணிகளிடம் போலியான டிக்கெட் வழங்கி ஏமாற்றிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். எங்கே மற்றும் யார் என்று பார்க்கலாம் வாருங்கள்!
கடந்த சில தினங்களாக சென்னை சென்ட்ரல்,பெரம்பூர், எழும்பூர் மற்றும் தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுக்க நிற்கும் பயணிகளிடம் போலியாக நோட்பேடில் சீல் வைத்து டிக்கெட் என கூறி ஒரு நபர் ஏமாற்றி வருவதாக, வந்த தகவலின் பேரில் இருப்புப்பாதை போலீசார் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சென்னையில் உள்ள அனைத்து முன்பதிவு மையங்களிலும் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
ஒரு வருடமாக ஏமாற்றி வந்த நபர்..!
இந்த நிலையில் நேற்று சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலைய முதல் தளத்தில் உள்ள முன்பதிவு டிக்கெட் கவுண்டரில் போலியாக நோட் பேடு, ரப்பர் ஸ்டாம்பு மற்றும் ஸ்டாம் பேடு ஆகியவையுடன் நின்றிருந்த நபரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்ததில் கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த ஜீதேந்திர ஷா(38) என தெரியவந்தது. சென்னை சென்ட்ரலில் , பெரம்பூர், எழும்பூர் மற்றும் தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுக்க நிற்கும் பயணிகளிடம் தன்னிடம் உள்ள நோட் பேடில் சீல் வைத்து இதை எடுத்துச் செல்லுங்கள், எந்த TTE யும் எதுவும் சொல்லமாட்டார்கள் என்றும் TTE உங்களுக்கு சீட்டு ஓதுக்கி கொடுத்துவிடுவார் என்றும் கூறி கடந்த 1 வருடமாக ஏமாற்றி வந்துள்ளார்.
சென்னை சென்ட்ரல் புறநகர் இரயில் நிலைய முன்பதிவு மையத்தில் வைத்து கைது செய்து விசாரணை மேற்கொண்ட சென்ட்ரல் இருப்புப்பாதை போலீசார் 420, 468 மற்றும் 471 ஆகிய மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.