சிறுமியின் உயிருடன் விளையாடிய அரசு மருத்துவமனை..! மாத்திரைகளை மாற்றிக் கொடுத்த வீடியோ வைரல்!

சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வந்த சிறுமிக்கு மாத்திரைகளை மாற்றி வழங்கிய மருத்துவமனை நிர்வாகத்தின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அலட்சியத்தால் சிறுமியின் உயிருக்கு உலை வைக்க முயன்ற சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

அலட்சியத்தால், காய்ச்சலுக்காக சிகிச்சை பெற வந்த சிறுமிக்கு மாத்திரைகளை மாற்றிக் கொடுத்த மருத்துவமனை நிர்வாகத்தின் காட்சிகளே இவை…

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த முகமது புல்லாக், தனது 6 வயது பெண் குழந்தையை காய்ச்சல் காரணமாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஓபி சீட்டு வாங்கிக் கொண்டு மருத்துவரைப் பார்த்துள்ளார். பின்னர் மருத்துவர் துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்ததை, காண்பித்து மருந்தாளுனரிடத்தில் மாத்திரைகளை பெற்றுள்ளார்.

அதனை மீண்டும் மருத்துவரிடம் சென்று காண்பித்தபோது, தான் இந்த மாத்திரைகளை எழுதிக் கொடுக்கவில்லை என மருத்துவர் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முகமது, தனது குடும்பத்துடன் சென்று மருந்துகளை ஏன் மாற்றி வழங்கினீர்கள் என மருந்தாளுனரிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு மருந்தாளுனர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததோடு, தவறை மறைக்க முயன்றுள்ளனர்.

இதனை அறிந்த அரசு மருத்துவமனை டீன் பழனிவேல், நேரடியாக சம்பவ இடத்துக்கு வந்து முகமது புல்லாக் குடும்பத்தினரிடம் நடவடிக்கை எடுப்பதாக கூறி மன்னிப்புக் கோரினார். மேலும் மருந்துகளை தவறாக வழங்கிய ஊழியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதாகவும் சப்பைக் கட்டு கட்டினார்.

இந்நிலையில் பல்வேறு தனியார் கல்லூரிகளில் இருந்து வரும் மாணவர்கள் பயிற்சிக்காக மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளில் நியமிக்கப்பட்டிருப்பதும், மாத்திரைகளை தவறாக வழங்கியது பயிற்சி மாணவர்களே என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்த வீடியோ காட்சிகள் வைரலானதையடுத்து, மருத்துவமனை டீன் பழனிவேலை தொடர்பு கொண்டு நமது செய்தியாளர் கேள்வி எழுப்பிய போது, இச்சம்பவம் தவறுதலாக நிகழ்ந்து விட்டதாகக் கூறி மன்னிப்பு கோரினார்.

இதற்கிடையே வியாழக்கிழமையும் மீண்டும் மாத்திரைகள் நோயாளிகளுக்கு மாற்றி வழங்கப்பட்டதன் காரணமாக, மருந்துகள் வழங்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டது.

கல்லூரி மாணவர்களை நியமித்து பயிற்சியளிக்கும் பெயரில், உயிருடன் மருத்துவமனை நிர்வாகம் விளையாடக் கூடாது என பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் இந்த விவகாரத்தால் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதை முற்றிலும் நிறுத்திவிடாமல், பயிற்சி காலத்தின் போது மேற்பார்வையாளர்கள் உடனிருப்பதை உறுதி செய்து அசம்பாவிதங்களை தவிர்க்கவும் வலியுறுத்தியுள்ளனர்.

Exit mobile version