சென்னை அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு முதல்வர் உத்தரவு!

சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் விலையில்லா உணவுகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்பு, அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவு, கடந்த 31ம் தேதி வரை விலையில்லாமல் வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளார். தற்போது, சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் ஊரடங்கு காரணமாக அம்மா உணவகங்களில் விலையில்லாமல் உணவு வழங்க உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். முதியோர், நோயுற்றோர் மற்றும் ஆதரவற்றோருக்கு சமுதாய உணவுக்கூடங்கள் மூலம் விலையில்லா உணவுகள் வழங்கப்படுகிறது எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ள இந்நிலையில், இப்பகுதிகளில் உள்ள சமுதாய கூடங்களை மேலும் வலுப்படுத்தி, போதுமான உணவு சமையல் செய்து, முதியோர், நோயுற்றோர் மற்றும் ஆதரவற்றோரின் வீடுகளுக்கே சென்று வழங்க ஆணையிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  இந்த நடைமுறை வெள்ளிக்கிழமை முதல் இம்மாத இறுதி வரை இருக்கும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  

Exit mobile version