தமிழக சுற்றுலாத்துறை சார்பில், சென்னை தீவுத்திடலில் நடைபெறும் பொருட்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார்.
பிரமாண்ட பொருட்காட்சிக்கான இறுதிகட்ட ஏற்பாடுகள் சென்னை தீவுத்திடலில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழக சுற்றுலாத்துறை சார்பில் நடத்தப்படும் பொருட்காட்சியில் 28 மாநில அரசுகளின் துறைகள், 16 மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்கள், 2 மத்திய அரசு நிறுவனங்கள், 4 பிற மாநில அரசு நிறுவனங்கள், இந்திய செஞ்சிலுவை சங்கம், தமிழ்நாடு சட்ட உதவி மையம் மற்றும் பல தனியார் அரங்குகள் அமைக்கப்படுகின்றன.
நாளை மறுநாள் தொடங்கும் இந்த கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைக்கிறார். மொத்தம் 70 நாட்கள் நடைபெறும் இந்த பொருட்காட்சியை வேலை நாட்களில் மாலை 3 மணியில் இருந்து இரவு 10 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் பொதுமக்கள் சுற்றி பார்க்கலாம். நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 35 ரூபாயும், சிறுவர்களுக்கு 20 ரூபாயும் வசூலிக்கப்படும். இதுதவிர அண்ணா கலையரங்கத்தில் தினந்தோறும் நாட்டியம், நாடகம் மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.