இங்கிலாந்து அரசியலமைப்பினை நாம் எடுத்துக்கொண்டால் உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் அரசியலைமைப்பிற்கு அதுதான் தாய் ஆகும். இந்தியாவின் அரசியலமைப்பிற்கும் இது பொருந்தும். இதனை “பாராளுமன்ற அரசியலைமைப்பின் தாய்” என்றும் அழைக்கலாம்.
இங்கிலாந்து அரசாங்கமானது ஒரு வரையறுக்கப்பட்ட முடியாட்சியைக் கொண்டு இயங்குகிறது. கொள்கையளவில் இது முடியாட்சியைக் கொண்டிருந்தாலும் அமைப்பு ரீதியாக பாராளுமன்ற முறையைக் கொண்டு இயங்குகிறது. பாராளுமன்றத்தில் இரண்டு அவைகள் உண்டு. ஒன்று பிரபுக்கள் சபை மற்றொன்று பொதுமக்கள் சபை. பிரபுக்கள் சபை என்பது வாரிசு அடிப்படையில் இயங்கக்கூடிய ஒன்று. ஆனால் பொதுமக்கள் சபையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இருப்பார்கள். பொதுமக்கள் சபையில் இருந்துதான் நாட்டின் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். தற்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக உள்ளார். மேல் சபையான பிரபுக்கள் சபை இங்கிலாந்து மக்கள் பின்பற்றும் வழக்காறுகளில் ஒன்று.
இந்த வழக்காறுகளின் அடிப்படையில்தான் அவர்கள் அரசக் குடும்பத்தையும் வழிவழியாக ஏற்கின்றனர். ஆரம்பத்தில் இங்கிலாந்து அரசர்களிடம் தான் சட்டம், நீதி, நிர்வாகம் ஆகியத் துறைகள் இருந்தன. இதனால் அவர்கள் சர்வாதிகாரப்போக்குடன் செயல்பட்டனர். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு முக்கியமாக 1688 புரட்சிக்குப் பின்னர் அரசரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பெயரளவிற்கான நிர்வாகத்துறை தலைவராக செயல்பட்டு வருகிறார். ஆனால் உண்மையான அதிகாரம் அமைச்சர்களிடம்தான் உள்ளது.
இங்கிலாந்து அரச பதவியானது மாறாது. அது காலங்காலமாக பின்பற்று வந்த பரம்பரை முறை ஆகும். 1701 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு நிர்ணயச்சட்டத்தின்படி, புரட்டஸ்டாண்டு மதத்தைச் சேர்ந்தவர்தான் அரசராக பதவி வகிக்க முடியும். மேலும் அவர் கத்தோலிக்க பிரிவைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்யமுடியாது. ஆண் பிள்ளை இல்லையென்றால், குடும்பத்தின் மூத்தப் பெண்பிள்ளை அரசுக்கட்டிலில் ஏறுவார். தற்போது மூன்றாம் சார்லஸ் அரசராக பதவியேற்றுள்ளார்.
அரசரின் அதிகாரங்கள் பெயரளவிற்கான ஒன்றுதான். கிட்டத்தட்ட இவரின் அதிகாரங்களை நம்முடைய குடியரசுத் தலைவரின் அதிகாரத்துடன் ஒப்பிட முடியும். நாட்டின் பிரதம அமைச்சர், மற்ற அமைச்சர்கள், தூதர்கள், நீதிபதிகள் போன்றவர்களை நியமனம் செய்யும் உரிமை அரசருக்கே உண்டு. மேலும் அரசரின் பேரில் தான் அலுவல மற்றும் அரசு ஆணைகள் பிறப்பிக்கப்படும். உண்மையான அதிகாரம் கேபினட் இடம்தான் உண்டு. அரசருக்கு கையெழுத்து போடுவது மட்டும்தான் வேலை என்றும் சொல்லலாம்.
– தமிழ்மணி
Discussion about this post