ஒருபுறம் எதிர்த்தாலும் மறுபுறம் மத்திய அரசின் கல்விக் கொள்கையை தமிழக அரசு பின்பற்றுவது அம்பலமானதால், தங்கள் வேடத்தை மறைக்க பள்ளிக்கல்வித்துறை ஆணையரையும் விடியா அரசு மாற்றி இருப்பதாக கூறப்படுகிறது. அதுகுறித்து பார்ப்போம்.
கடந்த அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வி இயக்குநர் இருக்கும்போதே, கூடுதலாக பள்ளிக்கல்வி ஆணையர் என்ற பதவியும் உருவாக்கப்பட்டு சிஜி தாமஸ் வைத்தியன், முதல் ஆணையராக நியமிக்கப்பட்டார். பள்ளிக் கல்வி இயக்குநர் அளிக்கும் தகவல்கள், ஆணையரின் மூலமாக அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததும், பள்ளிக்கல்வி இயக்குநரின் பொறுப்பையும் ஆணையரே எடுத்து நடத்துவார் என்று அறிவித்ததோடு, நந்தகுமார் ஐ.ஏ.எஸ்சை ஆணையராக நியமித்தது. இந்த அறிவிப்பு பல்வேறு விமர்சனங்களுக்கும் உள்ளானது.
கல்வித்துறையில் ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மை மாவட்டக் கல்வி அலுவலர், பள்ளிக்கல்வி இணை இயக்குநர், பள்ளிக் கல்வி கூடுதல் இயக்கநர் எனப் பல்வேறு பொறுப்புகளைச் சுமந்து, அவற்றில் கிடைக்கும் அனுபவத்தைக் கொண்டுதான் பள்ளிக் கல்வி இயக்குநர் பொறுப்புக்கு வருகிறார்கள். இவர்களின் பன்முக அனுபவம் நிச்சயமாக மாணவர்களின் முன்னேற்றத்துக்கு உதவும்.
இப்படி இருக்கையில், அந்தப் பதவியை ரத்து செய்தது எதிர்காலத்தில் தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், பள்ளிக் கல்வித்துறையில் முதன்மைச் செயலாளர் அந்தஸ்தில் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஏற்கெனவே இருக்கும்போது ஆணையர் அந்தஸ்தில் இன்னொரு ஐ.ஏ.எஸ் அதிகாரி எதற்கு? எனவும் ஆசிரியர் சங்கங்கள் போர்க்கொடி தூக்கின.
கல்வி என்பது நிர்வாகம் சார்ந்த விஷயமல்ல; மனித வளத்தை மேம்படுத்தும் விஷயம் என்பதால், இந்த நியமனம் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. புதிய அறிவிப்பை ரத்துசெய்துவிட்டு பழைய நடைமுறையே தொடரவேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் தெரிவித்தும் விடியா அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை… இந்த நியமனம் என்பதும் மறைமுகமாக தேசியக் கல்விக் கொள்கையை உட்புகுத்தும் வேலையாகவே பார்க்கப்படுவதாக அப்போதே எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தற்போது, தமிழக அரசு நியமித்த உயர்மட்டக் கல்விக்குழுவில் இருந்து வெளியேறிய பேராசிரியர் ஜவஹர் நேசனும், அதனை உறுதி செய்துள்ளார். தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக தமிழகத்துக்கு என தனித்த மாநில கல்வி வேண்டும் என்று குழு அமைக்கப்பட்ட போதும், தேசியக் கல்விக் கொள்கையை நோக்கியே அந்தக் குழுவை பயணிக்க அழுத்தம் கொடுப்பதாக உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். மீது அவர் புகார் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக உதயசந்திரன் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், பள்ளிக்கல்வி ஆணையராக இருந்த நந்தகுமாரும் இந்த புகாரின் பேரிலேயே மனிதவள மேம்பாட்டு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் கல்வித்துறையில் கிசுகிசுக்கப்படுகிறது. பொதுமக்கள் மத்தியில் ஒன்றிய அரசு என்று கூறி மத்திய அரசை எதிர்ப்பதாக வேடமிட்டாலும், மத்திய அரசோடு கல்விக் கொள்கை உள்ளிட்டவற்றில் இணக்கம் காட்டுவது அம்பலமாகி உள்ளதால்,…. தாங்கள் அப்படியெல்லாம் இல்லை என்று வேடமிடும் வகையில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாற்றியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதே நேரம், மீண்டும் பள்ளிக்கல்வி ஆணையராக யாரையும் நியமிக்க வேண்டாம்… ஏற்கனவே இருந்தபடி கல்வி இயக்குநர் பொறுப்பையே கொண்டு வரவேண்டும் என்பதே ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையாகவும் உள்ளது.