நிலவில் ஆக்சிஜன் மற்றும் கனிம வளங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், ஹைட்ரஜனை தேடும் பணியில் பிரக்யான் ரோவர் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி அன்று நிலவில் தரை இறங்கிய விக்ரம் லேண்டரிலிருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர், நிலவின் தென் துருவத்தில் கனிம வளங்கள் மற்றும் வெப்பநிலை குறித்து தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. முன்னதாக 10 சென்டிமீட்டர் ஆழம் வரை உள்ள நிலவின் வெப்ப நிலை குறித்து ஆய்வு செய்த பிரக்யான் ரோவர், இதனை வரைப்படம் வாயிலாக தகவல் பரிமாற்றம் செய்திருந்தது. இந்நிலையில் நிலவின் மேற்பரப்பில் சல்பர் இருப்பதை உறுதி செய்துள்ளது. இதனை தொடர்ந்து ஆக்சிஜன், கால்சியம், இரும்பு, அலுமினியம், டைட்டானியம், மெக்னீசியம், சிலிக்கான் உள்ளிட்ட கனிம வளங்கள் நிலவில் இருப்பதை பிரக்யான் ரோவர் கண்டறிந்துள்ளது. தற்போது நிலவில் ஹைட்ரஜனை தேடும் பணியினை பிரக்காயான் ரோவர் மேற்கொண்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.