சந்திரயானும் தமிழர்களும்! அப்துல்கலாம் டூ வீரமுத்துவேல் வரை!

நிலவு ஆராய்ச்சியில் இஸ்ரோவின் கனவு திட்டமாக இருக்கிறது சந்திரயான் விண்கலம். ஏற்கனவே நிலவை ஆராய்வதற்காக இந்தியா சார்பில் சந்திரயான் 1, சந்திரயான் 2 விண்கலம் அனுப்பப்பட்டது. தற்போது அடுத்த முயற்சியாக சந்திரயான் 3 விண்கலத்தை ஜூலை 14 (நாளை) ஆம் தேதி அனுப்புகிறது இந்தியா. ஒட்டுமொத்த இந்தியர்களின் கனவாக உள்ள இந்ததிட்டத்தின் மூளையாக தமிழர்கள்தான் இருக்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு…

ஆம், கடந்த 2008 ஆம் ஆண்டு சந்திரயான் 1 விண்ணில் செலுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கான திட்ட இயக்குனராக கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த மூத்த விஞ்ஞானியான மயில்சாமி அண்ணாதுரை நியமிக்கப்பட்டு இருந்தார்..

அதேபோல், 2019 ஆம் ஆண்டு நிலவின் தென் துருவப்பகுதியை ஆராய சந்திரயான் 2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவில் இறங்கி ஆய்வு செய்யும் வகையில் இந்தியா அனுப்பிய முதல் விண்கலம் இது. இந்த திட்டத்தில் சென்னையை சேர்ந்த வனிதா முத்தையா திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டு இருந்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் முதல் பெண் திட்ட இயக்குனரும் இவர்தான் என்பது கூடுதல் பெருமை… இவர் சிறந்த பெண் விஞ்ஞானி விருது பெற்றிருப்பவர் என்பதும் தமிழகத்திற்கு சிறப்பு..

இதனை தொடர்ந்து நிலவின் தென் துருவப்பகுதியை ஆய்வு செய்ய, ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட இருக்கிறது சந்திரயான் 3 விண்கலம். உலக அளவில் விண்வெளி துறையில் இந்தியாவின் பெயரை வரலாற்றில் பதிக்கவிருக்கும் இந்த திட்டத்தின் மூளையாகவும் தமிழர் ஒருவர் இருக்கிறார். ஆம், இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானியான வீரமுத்துவேல் என்பவரின் சிந்தனையில் உருவாக்கியிருக்கிறது சந்திரயான் 3 திட்டம். தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முத்துவேல்தான் இந்த சந்திரயான் 3 திட்டத்தின் தலைவராகவும், நிலவு பயணத்தின் திட்ட இயக்குனராகவும் செயல்பட்டு வருகிறார் …

ஏற்கனவே விண்வெளித்துறையில் மறைந்த ஜனாதிபதி ஏ.பி.ஜெ அப்துல்கலாம், சிவதாணுப்பிள்ளை, மயில்சாமி அண்ணாதுரை, சிவன், வனிதா முத்தையா உள்ளிட்ட தமிழர்கள் சிறப்பாக செயல்பட்டு தமிழர்களுக்கு பெருமை சேர்த்தனர். அந்த வகையில் தற்போது வீரமுத்துவேலும் இணைந்திருப்பது உலக அரங்கில் தமிழர்களுக்கான பெருமையை மேலும் உயர்த்தியிருக்கிறது.

Exit mobile version