தவளை போல் தவ்விய விக்ரம் லேண்டர்! ஜம்ப் அடித்தது எப்படி? ஸ்லீப் மோடில் இருக்கும் பிரக்யான் ரோவர் இனி செயல்படுமா?

சர்வதேச நாடுகள் அனைவரும் இந்தியாவை பிரமிப்பாக பார்த்து வருகிறார்கள். அதற்கு விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா தனது முக்கிய சாதனையான சந்திரயான் – 3 ஐ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது குறிப்பிடத்தக்க ஒன்று. நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் – 3 விண்கலத்தை நிலைநிறுத்தி புதிய சாதனைப் படைத்தது இஸ்ரோ அமைப்பு. சந்திரயான் – 3 திட்டத்தில் பிரக்யான் ரோவரானது நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை முடித்தபின்னர் தற்போது ஓய்வு நிலைக்கு சென்றுவிட்டது.

தவளை போல் குதித்த விக்ரம் லேண்டர்

இதில் ஒரு புதிய சாதனை என்னவென்றால், சந்திரயான் -3 நிர்ணயித்த இலக்குகளை தாண்டியும் விக்ரன் லேண்டர் சில சாதனைகளை செய்துள்ளது. தற்போது விக்ரம் லேண்டரை தாவிக்குத்திக்க செய்யும் பரிசோதனையும் வெற்றிகரமாக செய்யப்பட்டது. கட்டளைக் கிடைத்ததும், நாற்பது செ.மீ உயரே எழுந்து, பின்னர் 30 முதல் 40 செ.மீ தொலைவில் பாதுகாப்பாக தரையிரங்கியது. இதன் முக்கியத்துவம் குறித்து, இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டது என்னவென்றால், விக்ரம் லேண்டரை மேலெழச் செய்தது மூலம் எதிர்காலத்தில் ஆய்வு செய்துவிட்டு பூமிக்கு திரும்புவதற்கும், மனிதர்களை நிலவிற்கு அனுப்புவது தொடர்பாகவும் ஒரு உத்வேகத்தை தருகிறது. இதில் உள்ள அனைத்து சாதனங்களும் நன்றாக உள்ளன. எந்த பழுதும் இல்லை, சிறப்பாக செயல்படுகின்றன. இந்த வெற்றிகரமான பரிசோதனைக்குப் பிறகு அதிலுள்ள chaSTE, ILSA கருவிகள் மீண்டும் உள்ளிழுக்கப்பட்டு பாதுகாப்பாக இருக்கின்றன என்று இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.

விக்ரம் லேண்டர் தாவி குதித்தது எப்படி?

பூமியில் நாம் பந்து ஒன்றினை எப்படி வான் நோக்கி தூக்கி வீசினால். அது ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை சென்று மீண்டும் நிலத்தை நோக்கி திரும்பி வருமோ, அதையே தான் இந்த பரிசோதனையிலும் இஸ்ரோ செய்துள்ளது. பூமியைப் பொறுத்தவரை, பந்தானது ஈர்ப்பு விசை காரணமாக கீழ்நோக்கி விழும். அதேபோல, விக்ரம் லேண்டரும் தவளைபோல தாவிக்குதித்திருக்கிறது. மொத்தம் இந்த செயல்முறை மூன்று செயல்முறைகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.     முதலாவது செயல்முறையானது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் தானியாங்கி முறையில் நடைபெற்றது. இஸ்ரோவில் இருந்து கட்டளை வந்தவுடன், விக்ரம் லேண்டரில் உள்ள செயற்கை நுண்ணறிவு இந்த செயல்பாட்டை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. விக்ரம் லேண்டரில் தரையிரக்கப் பயன்படுத்தப்பட்ட அதே இன்ஜின்களைக் கொண்டுதான், இந்த நிகழ்வினையும் இஸ்ரோ நிகழ்த்தியுள்ளது. லேண்டரில் நான்கு கால்களிலும் பொருத்தப்பட்டுள்ள இன்ஜின்களை இயக்கி 40 செ.மீ தொலைவில் குதிக்க செய்து, பின்னர் நிலவின் ஈர்ப்பு விசையின் மூலம் பரவளையப் பாதையில் பயணித்து தரையிரங்கியது. இதில் இரண்டாவது முக்கியமான விசயம் என்னவென்றால், லேண்டரை நகர்த்த குறிப்பிட்ட கோணத்தில் அதனை மேலெழும்பச் செய்ய வேண்டும். மீண்டும் லேண்டர் தரையிரங்கும்போது லேண்டரின் கால்கள் சரியாக காலூன்ற வேண்டும். இவை அனைத்தையும் விக்ரம் லேண்டர் சரியாக செய்தது. மூன்றாவதாக, பூமியிலிருந்து பல லட்சம் கிலோமீட்டர் பயணித்து நிலவை அடைந்து, ஒரே இடத்தில் மட்டும் இல்லாமல், லேண்டரை நகர்த்தி வேறொரு இடத்திற்கு கொண்டு சென்றதன் மூலம், வருகின்ற காலகட்டங்களில், பல்வேறு லேண்டர்களை நிலவிற்கு அனுப்புவதன் மூலம், நம்பகத் தன்மையான ஆய்வுக்கு இது வழிவகுக்கிறது.

உறக்க நிலையில் உள்ள பிரக்யான் ரோவர் மீண்டும் இயங்குமா?

உறக்க நிலைக்கு சென்றுள்ள பிரக்யான் ரொவர் மீண்டும் இயங்குமா? என்றால் அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவுதான் என்று விஞ்ஞானிகள் பதிலளித்துள்ளனர். விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரின் ஆயுட்காலம் வெறும் 14 நாட்கள்தான். அவைகளுக்கு கொடுக்கப்பட்ட வேலையை வெற்றிகரமாக அவை முடித்துவிட்டது. செப்டம்பர் 22 ஆம் தேதி நிலவில் விக்ரம் லேண்டரும் உறக்க நிலையில் உள்ள பிரக்யான் ரோவரும் இருக்கும் இடத்தில் சூரிய ஒளிப்பட்டதும் இயங்குமா என்றால், இயங்குவதற்கு வாய்ப்புகள் குறைவே. ஆனால் இரண்டு மூன்று நாட்கள் இயங்க வாய்ப்பிருக்கிறது. அந்த வாய்ப்பினையும் இஸ்ரோ சரியான முறையில் பயன்படுத்தும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி இரண்டு நாட்கள் ரோவரும், லேண்டரும் இருந்திருந்தால் அதுவும் ஒரு சாதனையாக பார்க்கப்படும். மேலும் இந்தியாவிற்கான நிலவின் தூதராக இவை அங்கேயே இருக்கும் என்று நம்பப்படுகிறது.

Exit mobile version