இந்தியாவின் சந்திரயான் – 3 திட்டத்தின் கீழ் நிலவின் தென்துருவத்தில் லேண்டர் தரையிறங்கியுள்ளது. இதன்மூலம் நிலவின் தென்துருவ ஆய்வை மேற்கொள்ளும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா அடைந்துள்ளது. மற்ற நாடுகள் அனுப்பிய விண்கலன்கள் எல்லாம் நிலவின் மத்திய ரேகைப் பகுதியில் தரையிறக்கப்பட்டன. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது எளிதானது. ஏனென்றால் சந்திரயான் 3 இறங்கியுள்ள இடம், பல பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளியே படாத, இருண்ட பக்கமாக வர்ணிக்கப்படும் நிலவின் தென் துருவத்தில்…
இந்தியா சந்திரயான் 2 விண்கல திட்டத்தை கடந்த 2019ம் ஆண்டு அமல்படுத்தியது. இந்த திட்டம் நூலிழையில் தோல்வியடைந்தது.
இருப்பினும் சந்திரயான்- 2 திட்டத்தின் ஆர்ப்பிட்டர் நிலவின் சுற்றுவட்ட பாதையில் கடந்த 4 ஆண்டுகளாக சுற்றி ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் சந்திரயான் 3, கடந்த ஜூலை 14ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியின் சுற்றுவட்ட பாதையை கடந்து, நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் சந்திரயான் 3 உந்துவிசை கலனில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்தது.
அடுத்த கட்டமாக விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி நிலவின் தென்துருவத்தில் மெதுவாக தரையிறங்கியது. இந்திய நேரப்படி மாலை சரியாக 6 மணி 4 நிமிடத்துக்கு திட்டமிட்டபடி தரையிறங்கியது.
விக்ரம் லேண்டர் தரையிறங்கிய கடைசி 15 நிமிடங்களானது மிகவும் முக்கியமானதாக கருதப்பட்டது. நிலவின் சமதள பரப்பை கண்டறிந்து அதில் தரையிறங்குவதை நாடே ஆவலாக பார்த்துக் கொண்டிருந்தது. மிகவும் சவாலான இந்த இடத்தில்தான் கடந்த முறை சந்திரயான் 2 விழுந்து நொறுங்கியது குறிப்பிடத்தக்கது.
நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய விக்ரம் லேண்டரின் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமரா மூலம் நிலவில் தரையிறங்கிய பிறகு எடுத்த முதல் படத்தை விக்ரம் லேண்டர் இஸ்ரோவுக்கு அனுப்பியது.
லேண்டர் தரையிறங்கிய பிறகு 4 மணி நேரத்துக்கு பிறகு ரோவர் வாகனம் வெளியேறியது. நிலவின் மேற்பரப்பில் சுற்றி வரும் ரோவர் வாகனம் மொத்தம் 14 நாட்கள் நிலவில் ஆய்வு செய்யும். ரோவர் சக்கரங்களில் இந்திய தேசியக்கொடி மற்றும் இஸ்ரோவின் லோகா அச்சுக்கள் பொறிக்கப்பட்டுள்ன. இதன்மூலம் இந்தியாவின் பெயர் நிலவில் பொறிக்கப்பட உள்ளது.
இந்த ரோவர் கருவி வினாடிக்கு 1 சென்டி மீட்டர் என்ற வேகத்தில் தான் நிலவில் நகரும். இப்படி நகரும்போது அதிநவீன கேமராக்கள் மூலம் நிலவை படம்பிடித்து அனுப்பும். சந்திரன் ஆய்வுகள் குறித்த முக்கிய விபரங்களை இஸ்ரோவுக்கு அனுப்பும் கருவிகள் ரோவரில் உள்ளன.
அதேவேளையில் நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர் அங்குள்ள அயனிகள் மற்றும் எலக்ட்ரான்கள் குறித்த ஆய்வுகளை செய்யும். அந்த பகுதியில் உள்ள வெப்பத்தின் அளவுகள், நிலஅதிர்வுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய உள்ளது. மேலும் ரோவர் வாகனம் இயங்குவதற்கு தேவையான சூர்யசக்தி ஆற்றலை லேண்டர் தனது சூரியத் தகடுகள் மூலம் உற்பத்தி செய்து வழங்க உள்ளது.
சந்திரயான் -3 மூலம் உலக அரங்கில் இந்தியாவின் புகழ் ஓங்கி ஒலித்துள்ளது. அதே நேரத்தில் தமிழர்களின் திறமையையும், பெருமையையும் உலகறியச் செய்துள்ளது.
சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குநராக 2019- ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட வீரமுத்துவேல் ஒரு தமிழர். விழுப்புரத்தைச் சேர்ந்த இவர் விழுப்புரம் ரயில்வே பள்ளியில் தமிழ்வழியில் படித்தவர். தனது 2004- ஆம் ஆண்டு முதல் இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். சந்திரயான்-2-ன் திட்ட இயக்குநராக இருந்தவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரே. சென்னையை சேர்ந்த முத்தையா வனிதா தான் சந்திரயான்-2-ன் திட்ட இயக்குநராக செயல்பட்டார். அப்போது அவர் இஸ்ரோவின் முதல் பெண் திட்ட இயக்குநர் என்ற பெருமையை பெற்றார்.
சந்திரயான் திட்டத்திற்கு ஒரு தமிழர் தலைமை வகிப்பது இது முதல்முறை அல்ல. சந்திரயான்-1இன் திட்ட இயக்குநராக இருந்த மயில்சாமி அண்ணாதுரை பொள்ளாச்சி அருகே கொத்தாவடி கிராமத்தில் பிறந்தவர். செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்த மங்கல்யான் திட்டத்திலும் மயில்சாமி அண்ணாதுரை முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரயான்-3 திட்டத்தின் மூலம் நிலவு ஆராய்ச்சியில் மற்ற நாடுகளை விட இந்தியா ஒரு படி மேலே முன்னேறியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. இந்த சரித்திர சாதனையின் மூலம், ஒரு காலத்தில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிகளை எள்ளி நகையாடிய நாடுகள் எல்லாம் தற்போது இந்தியாவை அண்ணாந்து பார்க்கின்றன..
Discussion about this post