நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியதை கொண்டாடும் விதமாக, சந்திரயான் 3ன் திட்ட இயக்குனர் வீரமுத்துவேலின் தந்தை விழுப்புரத்தில் உள்ள தனது இல்லத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினார்.
இந்தியா சார்பில் கடந்த ஜூலை 14ம் தேதி நிலவின் தென் துருவப் பகுதியை ஆராய்ச்சி செய்வதற்கு சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. பின்னர் சந்திரயான் 3-ன் விக்ரம் லேண்டர் 41 நாட்களுக்கு பிறகு, நிலவின் தென் துருவப் பகுதியில் முதல் நாடாக வெற்றிகரமாக தரை இறங்கி சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இதனை கொண்டாடும் விதமாக சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலின் தந்தையான பழனிவேல், விழுப்புரத்தில் உள்ள தனது வீட்டில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தார். மேலும் தனது மகன் தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.