இறுதி சுற்றுவட்டப் பாதையில் சந்திரயான் – 3! ஆகஸ்ட் 1-ல் நிலவை நோக்கி பயணம்!

சந்திரயான் – 3 விண்கலம் தனது இறுதி சுற்றுவட்டப் பாதையை வெற்றிகரமாக அடைந்திருப்பதாகவும், ஆகஸ்ட் ஒன்றாம் தேதி நிலவை நோக்கி தனது பயணத்தை தொடங்க இருப்பதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சந்திரயான் -3 விண்கலம் எல்விஎம் 3 ராக்கெட் மூலம் கடந்த 14 ஆம் தேதி பிற்பகல் 2.35 மணி அளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்ட 16வது நிமிடத்தில் சந்திரயான் – 3 விண்கலம் புவியின் முதல் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.

பின்னர் சந்திரயான் -3 விண்கலம் படிப்படியாக அடுத்தடுத்து சுற்றுவட்டப் பாதைகளில் நிலை நிறுத்தப்பட்டது. இந்தநிலையில், சந்திரயான் 3 விண்கலம் செவ்வாய்க்கிழமை மதியம் 2.40 மணியளவில் தனது இறுதி சுற்று வட்டப் பாதையான ஐந்தாவது சுற்றுப்பாதைக்கு வெற்றிகரமாக உயர்ந்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரயான் – 3 விண்கலம் சுமார் 40 நாட்கள் பயணித்து நிலவுக்கு சென்றடைய உள்ளது. குறைவான எரிபொருளை பயன்படுத்தி பூமி மற்றும் நிலவின் ஈர்ப்பு விசையை கொண்டு செயல்படும் சந்திராயன் -3 விண்கலம், சுமார் 1 லட்சத்து 27 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் பூமியின் ஐந்தாவது சுற்றுவட்ட பாதையில் சுற்றி வருகிறது.

இந்த விண்கலம் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி நிலவை நோக்கி தனது பயணத்தை தொடங்கும் என்றும், ஆகஸ்ட் 5 ஆம் தேதி நிலவின் சுற்றுவட்ட பாதையை சென்றடைந்து ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை தனது பயணத்தை தொடரும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. பின்னர் ஆகஸ்ட் 23 ஆம் தேதி சந்திரயான் – 3 விண்கலம் நிலவின் மேற்பரப்பிற்கு சென்றடையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. உலகமே உற்று நோக்கி வரும் இந்தியாவின் கனவு திட்டமான சந்திரயான் – 3 ஐந்தாவது சுற்றுப்பாதைக்கு உயர்ந்திருப்பதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Exit mobile version