பேட்டரி வாகனங்களுக்கான பதிவு கட்டணத்தை ரத்து செய்ய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் நாளுக்குநாள் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் வாகனங்களின் எண்ணிக்கையால் கச்சா எண்ணெயின் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் வெளிநாடுகளிலிருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டிய நெருக்கடி உருவாகியுள்ளது.
சுற்றுச்சூழலும் கடுமையாக மாசடைந்து வருவதால் எதிர்காலத்தில் பேட்டரியில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கான பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் மத்திய அரசு, பேட்டரி வாகனங்களுக்கான பதிவு கட்டணத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. இதுத்தொடர்பாக விரைவில் மத்திய மோட்டார் வாகன சட்டம் 1989-ல் திருத்தம் செய்ய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை தீர்மானித்திருக்கிறது.
இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைவதுடன் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.