சென்னை ஆவடியில், 407 மத்திய ரிசர்வ் காவலர்கள் தங்களது பயிற்சியினை நிறைவு செய்தனர்.
பயிற்சி முகாமில், மத்திய ரிசர்வ் காவல் படையின் டி.ஐ.ஜி பிரவீன் தலைமையில், சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு 407 புதிய காவலர்களுக்கு 24 வார கடின பயிற்சி அளிக்கப்பட்டது. 24 வார கடின பயிற்சியில் நவீன ஆயுதங்களை கையாளும் பயிற்சிகள், துப்பாக்கியுடன் கூடிய குண்டெறியும் பயிற்சிகள், தீவிரவாத நடவடிக்கையை முறியடிக்கும் பயிற்சிகள் உட்பட பல்வேறு பயிற்சிகள் காவலர்களுக்கு அளிக்கப்பட்டது. மேலும், பயிற்சி முகாமில் 8 நிலைகள் கொண்ட துல்லியமாக குறி பார்த்து துப்பாக்கி சுடும் பயிற்சிகளும் அளிக்கப்பட்டது. காவலர்கள் பயிற்சிகளை மேற்கொள்ள தேவையான துப்பாக்கி சுடும் மைதானம், உடற்பயிற்சி கூடம், ஓடுதளம் மற்றும் நீச்சல் குளம் என அனைத்து வசதிகளும் செய்யபட்டு இருந்தது. பயிற்சி முகாமில் 407 காவலர்கள் தேர்ச்சி பெற்றதை தொடர்ந்து, 407 காவல் படை வீரர்களின் சிறப்பு கொடி அணிவகுப்பு மரியாதை நிகழ்ச்சியும், சாகச நிகழ்ச்சியும் நடைபெற்றது.