கீழடியில் மீண்டும் அகழாய்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதை அடுத்து, விரைவில் அகழாய்வு பணிகள் தொடங்கும் என்று தெரிகிறது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 2015 ஆம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்றன. அகழ்வாய்வின் போது மண் பானை ஓடுகள், ஆயுதங்கள், முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், 2016 மற்றும் 2017 ஆண்டுகளில் ஆய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்றன.
கீழடியில் பண்டைய தமிழர்கள் நகரம் அமைத்து வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்ற நிலையில், தொடர்ந்து ஆய்வு நடத்த வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரி வந்தன.
இதனிடையே 4-ம் கட்ட அகழாய்வுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்திருந்தது. இந்த நிலையில், கீழடியில் மீண்டும் ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கீழடியில் தொடர்ந்து ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.