இணையதள நடைமுறையை அமல்படுத்தி குடியுரிமை வழங்க மத்திய அரசு தீவிரம்

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநிலங்கள் எதிர்ப்பதால், இணையதள நடைமுறையை அமல்படுத்தி குடியுரிமை வழங்க மத்திய அரசு தீவிரமாக பரிசீலிக்கிறது.

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி 2014-ம் ஆண்டு வரை இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக புதிதாக குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநிலங்களில் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என அவற்றின் முதல்-அமைச்சர்கள் அறிவித்துள்ளனர். குறிப்பாக மேற்கு வங்காளம், பஞ்சாப், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், கேரள மாநில முதல் அமைச்சர்கள், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு தங்கள் மாநிலங்களில் இடம் இல்லை என அறிவித்துள்ளனர். இது மத்திய அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், மாநிலங்களை புறந்தள்ளி விட்டு, இணையதளம் வாயிலாக குடியுரிமை வழங்க பரிசீலிக்கிறது. இதன்மூலம் மாவட்ட கலெக்டர் மூலமாக குடியுரிமை விண்ணப்பங்களை அனுப்புகிற தற்போதைய நடைமுறை ரத்து ஆகும்.

Exit mobile version