சபரிமலையில் நடைபெற்று வரும் வன்முறை தொடர்பாக கேரள ஆளுநர் அறிக்கை அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என கடந்த செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிராக மாநிலத்தில் பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
இளம்பெண்கள் சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய கடுமையான எதிர்ப்பு காணப்படும் சூழலில், கடந்த வாரத்தில் இரண்டு பெண்கள் போலீசார் பாதுகாப்புடன் தரிசனம் செய்தனர்.
இதை கண்டித்து சில தினங்களாக இந்து அமைப்புகள் தொடர் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதையடுத்து கண்ணூர், திருவனந்தபுரம், பத்தினம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. போலீசார் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தற்போதைய சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் கேரள ஆளுநர் பி. சதாசிவத்திடம் அறிக்கை கேட்டுள்ளது. வன்முறை சம்பவங்கள், பொது சொத்துக்கள் சேதம் உள்ளிட்டவை குறித்து விவரங்களை அளிக்க அவரிடம் கேட்கப்பட்டுள்ளது.