முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 2014ம் ஆண்டு மத்தியில் ஆட்சியில் அமர்ந்த மத்திய பாஜக அரசு இதுவரை 5 முழு பட்ஜெட்களை தாக்கல் செய்துள்ளது. பாஜகவின் 5 ஆண்டு கால ஆட்சி மே மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து வரும் 1ம் தேதி இடைக்கால பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
70 ஆண்டுகளில் இல்லாத நடைமுறையாக முழு பட்ஜெட்டை மத்திய பாஜக அரசு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வெளியிட மோடி அரசு முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இந்த முடிவு அரசியலமைப்பு நடைமுறைக்கு எதிரானது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
மத்திய பாஜக அரசு தனது ஐந்தாண்டு கால ஆட்சியில் இதுவரை 5 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ள நிலையில், ஆறாவது முறையாக முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
பாஜக தனது ஆட்சியின் இறுதி நாட்களில் உள்ளது. இந்நிலையில் ஆண்டின் 365 நாட்களுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது என்று அவர் கூறியுள்ளார். தேர்தலை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கையில் ஈடுபட மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Discussion about this post