சோறு இல்லன்னாக்கூட இருந்துடலாம்…. ஆனா, செல்போன் இல்லன்னா செத்துருலாம்போல இருக்குன்னு மிகைப்படுத்திச் சொன்னாலும் கூட, அதில் உண்மை இல்லாமல் இல்லை. நம் அன்றாட வாழ்வில் அத்தியாவசியப் பொருளாகிப் போன செல்போனை, தொடர்ந்து பயன்படுத்துவதால் முதுகுவலி பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது. அதுகுறித்து பார்ப்போம்.
இன்றைய நவீன உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கைகளையும் அலங்கரிக்கிறது ஸ்மார்ட் போன். மல்டி டாஸ்கிங் என்று சொல்லக்கூடிய ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் திறன் கொண்ட ஸ்மார்ட் போன் மோகத்தால் மக்கள் அதற்கு அடிமையாகி வருகின்றனர். கல்லூரியில் படிக்கும் மாணவிகள் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் ஸ்மார்ட் போன் உபயோகிக்கிறார்கள் என்றும், 5இல் 3 பேர் தங்களின் ஸ்மார்ட் போன் இல்லாமல் வெளியில் 60 நிமிடங்களுக்கு மேல் இருப்பதில்லை என்றும் ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன.
இந்தநிலையில், ஒரு நாளைக்கு 3 மணி நேரத்திற்கும் அதிகமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால், முதுகு வலி பிரச்சினைகளை எதிர்கொள்ளும் இளம்வயதினரின் எண்ணிக்கையானது கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக என்று பிரேசில் ஆராய்ச்சியாளார்கள் தெரிவித்துள்ளனர். ஸ்மார்ட்போனை தொடர்ந்து உபயோகிப்பதால், Occipital neuralgia என்ற நரம்பியல் பாதிப்பு ஏற்படுகிறது என்றும், குறுகிய கால பாதிப்புகளை தாண்டி நீண்ட பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளனர். நீண்ட நேரம் ஸ்மார்ட் போன் பார்த்துக் கொண்டே இருப்பது ஒரு வித பதற்றத்தை மனதில் ஏற்படுத்துவதாகவும், போனில் நண்பர்களுடன் உரையாடலில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது தொடர்ந்து அவர்களின் பதில்களுக்காக காத்துகொன்டே இருப்பதால் இந்த பதற்ற சூழல் உருவாவதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல் மொபைல் போனில் விளையாடும் ஒவ்வொரு நிமிடமும் ஆரோக்கியத்தை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இதனை குணப்படுத்த எந்த மருந்தும் கிடையாது. ஸ்டீராய்டு மற்றும் ஊசி, யோகா, மசாஜ் போன்றவை அந்த நேரத்து வலியை மட்டும் கட்டுப்படுத்தும். ஸ்மார்ட் போனுடைய தேவை அதிகரித்தாலும், நம்முடைய உடலுக்கு தீங்கு வரும் அளவுக்கு உபயோகிப்பதை தவிர்ப்பது நல்லது என்கிறார்கள் ஆய்வாளர்கள். அளவுக்கு மீறினால் செல்போன் பயன்பாடும் உயிர் குடிக்கும்!
– பாலாஜி, செய்தியாளர்