சென்னை குரோம்பேட்டையில் உள்ள மகளிர் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்கள் மாணவர்களுடன் இணைந்து சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், சென்னை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் ஒன்றிணைந்து சமத்துவப் பொங்கல் விழாவை கொண்டாடினர். பாரம்பரிய உடையணிந்து கல்லூரிக்கு வருகை தந்த மாணவிகள், கல்லூரி வளாகத்தில் மண்பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். மேலும் மாணவிகள் அனைவரும் ஒருங்கிணைந்து கும்மியடித்தும், நடனமாடியும், பாரிம்பரிய விளையாட்டுகளை விளையாடியும் பொங்கலை வரவேற்றனர்.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் சமத்துவப் பொங்கலை உற்சாகமாக கொண்டாடினர். பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்து கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகள், மண் பானையில் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில் திரைப்பட பாடகர் வேல்முருகன் கலந்து கொண்டு மாணவர்களோடு பொங்கல் வைத்ததுடன் பல பாடல்களை பாடி அசத்தினார்.
இதேபோல் திருப்பதூர் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சமத்துவப் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். நீதிமன்ற நடுவர் சாமுண்டீஸ்வரி பிரபா தலைமையில், வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் வைத்ததுடன், பாரம்பரிய விளையாட்டுகளிலும் பங்கேற்று மகிழ்ந்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சாமுண்டீஸ்வரி பிரபா பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். நிகழ்ச்சியில், நீதிமன்ற ஊழியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Discussion about this post