ஆபாசமாக பேசி பப்ஜி விளையாட்டை ஒளிப்பரப்பி கைதான மதனை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்கள் குறித்து ஆபாசமாக பேசி பப்ஜி விளையாட்டை தனது யூடியூப் சேனலில் ஒளிப்பரப்பி வந்த மதனை கடந்த 18ஆம் தேதி தர்மபுரியில் வைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.பப்ஜி மதனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது.மேலும் பப்ஜி மதன் மீது புகாரளிக்க பிரத்யேகமாக மின்னஞ்சல் முகவரியை சைபர் கிரைம் போலீசார் வழங்கினர்.அதில் 100க்கும் மேற்பட்ட புகார்கள் பப்ஜி மதன் மீது வந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து 9லட்சம் பார்வையாளர்களை கொண்ட பப்ஜி மதனின் யூடியூப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை சைபர் கிரைம் போலீசார் கைப்பற்றி அதன் மூலம் சிறுவர்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் பப்ஜி மதன் மீது வந்த புகார் தொடர்பாக விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்துள்ளது.குறிப்பாக பப்ஜி மதன் ஆதரவற்றோருக்கு உதவுவது போல நடித்து பணப்பறிப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மேலும் தோழிகளுக்கு பணம் கொடுத்து ஆபாசமாக பேச வைத்ததாகவும்,யூடியூப் மூலம் சம்பாதித்த பணத்தை வெளிநாட்டில் முதலீடு செய்துள்ளாரா என பல கோணங்களில் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
பின்னர் பப்ஜி மதனின் யூடியூப் சேனலுக்கு அட்மினாக இருந்ததாக கைது செய்யப்பட்டுள்ள அவரது மனைவி கிருத்திகாவையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு நாள் போலீஸ் காவல் முடித்து இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்..