ஆம்பூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி ஆலோசனைக் கூட்டம் நடத்திய புகாரில் திமுக தலைவர் ஸ்டாலின், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர் தனியார் மண்டபத்தில், திமுக தலைவர் ஸ்டாலின், தேர்தல் நடத்தை விதிகளை மீறி இஸ்லாமிய அமைப்பினருடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற தனியார் மண்டபத்திற்கு சீல் வைத்தனர். இந்நிலையில் தேர்தல் விதிகளை மீறி கூட்டம் நடத்தியதாக ஸ்டாலின், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோர் மீது ஆம்பூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தடையை மீறி கூட்டம் நடத்துவதற்கு அனுமதியளித்த தனியார் மண்டப உரிமையாளர் ஜக்கரியா மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.