தெலங்கானாவில் வரும் 19-ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம்

தெலங்கானா மாநிலத்தில் வரும் 19 ஆம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்ய இருப்பதாக முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் கடந்த டிசம்பரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும்கட்சி அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதையடுத்து டிசம்பரில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது.

முதலமைச்சராக சந்திரசேகர் ராவ் பதவியேற்ற நிலையில், அவருடன் உள்துறை அமைச்சராக முகமது அலி மட்டும் பொறுப்பேற்றார். வேறு யாரும் பொறுப்பேற்காத நிலையில், இரண்டு மாதங்களாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாதது குறித்து எதிர்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. 119 சட்டப்பேரவை உறுப்பினர்களை கொண்ட தெலங்கானா மாநில அமைச்சரவையில் 17 பேர் இடம்பெற முடியும்.

ஜோதிட நிபுணர்களின் ஆலோசனைப்படி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாததாக எதிர்கட்சிகள் தொடர் குற்றச்சாட்டை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் வரும் 19-ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் நரசிம்மனை சந்தித்து பதவியேற்கவுள்ள அமைச்சர்கள் பட்டியலை அவர் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 19-ம் தேதி முகூர்த்த தினம் என்பதாலும், தெலுங்கு காலண்டரின்படி மகா சுதா பவுர்ணமி தினம் என்பதாலும் அன்றைய தினம் அமைச்சரவை விரிவாக்கத்தை செய்ய சந்திரசேகர ராவ் திட்டமிட்டுள்ளதாக எதிர்கட்சிகள் தெரிவித்து வருகின்றன.

Exit mobile version