வங்கிகளில் கடன் வாங்கி விட்டு வெளிநாடு தப்பி ஓடியவர்களின், 3 ஆயிரம் கோடி மதிப்பிலான பங்குகளை ஏலம் விட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்ற விஜய் மல்லையா, முகுல் சோக்சி உள்ளிட்ட பலர் பணத்தை கட்டாமல் வெளிநாடு தப்பிச்சென்றனர். இதனால் பொதுத்துறை வங்கிகளில் பல லட்சம் கோடி ரூபாய் வாராகடன் பிரச்சினை உருவானது.
இதையடுத்து வெளிநாடு தப்பிச்சென்றவர்களை இந்தியா கொண்டு வருவதற்கும் அவர்களிடம் இருந்து கடனை வசூலிக்கவும் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டம் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத், வங்கிகளில் கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பியோடியவர்கள், தலைமறைவாக இருப்பவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்று அறிவித்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளையும் நிறுவனப் பங்குகளையும் ஏலம் விடுவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.