அதிமுக எம்பி சி.வி.சண்முகம் அவர்களுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெற்ற உத்தரவு ரத்து – உயர்நீதிமன்றம் அதிரடி!

அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்திற்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெற்ற தமிழக அரசு உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், பாதுகாப்பு வழங்குவது குறித்து எட்டு வாரத்தில் பரிசளித்து முடிவெடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலன்று தன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு, கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் திடீரென விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும், தனது துப்பாக்கி உரிமத்தை புதுப்பித்து தரவில்லை எனவும் கூறியுள்ளார்.

தற்போது அந்த வழக்கு சாட்சி விசாரணை கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாதுகாப்பை விலக்கியதற்கான காரணத்தை தெரிவிக்க கோரியும், பாதுகாப்பு வழங்கக் கோரியும் அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி சந்திரசேகரன் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது, சி.வி சண்முகம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கே எஸ் தினகரன் ஆஜராகி, உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும்போது காவல்துறை பாதுகாப்பு பெற முடியும் என்கிற உரிமை மறுக்கப்படுவதாகவும், கொலை முயற்சி வழக்கு முக்கிய கட்டத்தை எட்டி உள்ள நிலையில் 18 மாதங்களாக போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என்று காவல்துறை தொடர்ந்து கூறி வருவதை சுட்டிக்காட்டி, ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடைபெற வேண்டும் என்று காவல்துறை காத்திருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பினார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாபு முத்துமீரான், 2006 ஆம் ஆண்டு நடந்த தாக்கல் சம்பவத்தை தொடர்ந்து 18 ஆண்டுகளாக பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்ததாகவும், தற்போது அவரது உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என மாவட்ட காவல்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையிலேயே பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதாகவும், இதில் உள்நோக்கம் ஏதும் இல்லை என்றும் தெரிவித்தார்.

பாதுகாப்பு மறு ஆய்வு குழுவின் முடிவின் அடிப்படையிலேயே பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதாக விளக்கம் அளித்தார். 2006 ஆம் ஆண்டு தாக்குதல் சம்பவம் நடத்திய பாமக-வுடன் அதிமுக தற்போது இணக்கமான சூழல் இருப்பதாலும், அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களுக்கு எதிராகத்தான் புகார்கள் அளித்திருப்பதாலும், சி,வி.சண்முகத்தின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கருத வேண்டியதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், நீதிபதி இன்று பிறப்பித்துள்ள தீர்ப்பில், சி.வி.சண்முகத்திற்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை திரும்ப பெற்ற தமிழக அரசு உத்தரவை ரத்து செய்த உத்தரவிட்டுள்ளார். மேலும், போலீஸ் பாதுகாப்பு கோரி சண்முகம் அளித்த மனுவை 8 வாரத்தில் பரிசளித்து முடிவெடுக்கவும் அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.

Exit mobile version