சிவகங்கை காரையூர் பகுதியில் கார்த்தி சிதம்பரத்தின் தேர்தல் பிரசாரத்தின் போது கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கொடி இல்லாததால் சலசலப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள காரையூர் பஞ்சாயத்தில் சிவகங்கை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். திருப்பத்தூர், சிங்கம்புணரி போன்ற தாலுகா முழுவதும் ஓட்டு வேட்டை நடத்தி கொண்டிருந்த கார்த்தி சிதம்பரத்தை, காரையூரில் வரவேற்பதற்காக கூட்டணி கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.
அப்போது, கூட்டணிக் கட்சியின் கொடிகளான தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுடைய கொடிகள் கட்டப்பட்டிருந்தன. ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிகள் மட்டும் இல்லாததால் அக்கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். இதனால் தேர்தல் பிரசார கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.