நாள்பட்ட நாளாக இந்த தக்காளி நம் மக்களை படாத பாடு படுத்தி எடுக்கிறது., இதற்கு ஒரு தீர்வு இல்லையா என்று அனைத்து தரப்பினரும் வாய்விட்டு கேட்டும் விட்டார்கள். தங்கம் கூட வாங்கிரலாம் போல ஜி இந்த தக்காளிய வாங்க முடில என்று புலம்பித் தள்ளுகிறார்கள். பத்தாதற்கு நமக்கெல்லாம் தாக்காளி சாதம் ஒரு கேடா என்று நினைக்கும் அளவுக்கு தக்காளியின் விலை ஏறிப்போய் இருக்கிறது. இப்படி ஒரு புறம் இருக்க ஒரு டீ வாங்கினான் ஒரு கிலோ தக்காளி இலவசம் என்று போலீஸ் பாதுகாப்புடன் விற்றுக்கொண்டிருக்கிறார் ஒரு நபர். யார் அவர்? எங்கே இது நிகழ்ந்துகொண்டிருக்கிறது? வாங்க பார்க்கலாம்.
கொளத்தூரில்..!
சென்னை கொளத்தூரில் புதிதாகத் திறந்துள்ள டீக் கடையில்தான் இந்த சலுகையானது கொடுக்கப்பட்டுள்ளது. மழைக்குக் கூட டீக் கடைப் பக்கம் ஒதுங்காதவர்கள் தற்போது தக்காளிக்காக ஒதுங்கியிருக்கிறார்கள். போட்டிப்போட்டு டீக் குடித்து இலவசமாக ஒரு கிலோ தக்காளியை வாங்கி கூலாக செல்கிறார்கள். கொளத்தூர் கணபதி ராவ் நகரில் வசிக்கும் டேவிட் என்பவருக்கு தான் இந்த புதிய நூதன சிந்தனை உதித்திருக்கிறது. அவர் நேற்றைக்கு நவீன வசதிகளுடன் கூடிய டீக்கடையை திறந்தார். முதலீடு போட்டவர்களுக்கு பெரிதாக சாதித்துக்காட்டும் எண்ணமும், கடையைப் பிரபலப்படுத்தும் எண்ணமும் இருப்பது இயற்கையே. அப்படி அவர் பிரபலப்படுத்த நினைத்து இந்த நூதன வேலையைப் பார்த்துள்ளார். கடையை நேற்று திறந்தவுடன், நேற்று இன்று நாளை ஆகிய மூன்று நாட்களுக்கு மாலை நான்கு மணி முதல் ஆறு மணி வரை பன்னிரெண்டு ரூபாய் கொடுத்து டீ வாங்கும் முதல் நூறு வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக ஒரு கிலோ தக்காளி வழங்கப்படும் என்று அறிவிப்பினை வெளியிட்டார்.
விரைந்திடும் பொதுமக்கள்..!
கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்வதில் நம்மவர்களுக்கு நிகர் யாருமில்லை. இந்த செய்தி காட்டுத் தீயாய்ப் பரவி கொளத்தூர் பகுதியில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் சென்றடைந்தது. இதனையடுத்து நேற்று மாலை மூன்று மணிக்கே டீ வாங்குவதற்கு மக்கள் கூட்டமாக வந்தனர். அவர்களுக்கு 100 டோக்கன்கள் வழங்கப்பட்டு டீயானது விற்கப்பட்டது. அதன் பிறகு வரிசையில் நிற்கவைத்து அவர்களுக்கு ஒரு கிலோ தக்காளியும் வழங்கப்பட்டது. இதனால் கடைக்கு மவுஸ் கூடிப்போய் அதிகமாக மக்கள் வந்துகொண்டே இருந்தனர். இதனால் முன்னெச்செரிக்கை நடவடிக்கையின் பொருட்டு அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. டீயைக் குடித்துவிட்டு கட்டப்பையில் தக்காளியினை அள்ளிச் சென்ற மக்களை பார்ப்பதற்கு அவ்வளவு மகிழ்ச்சி. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பயன்படுத்தி சிலர் தங்களை இது மாதிரி வளர்த்து வருகின்றனர். ஆனால் இது காலத்தின் தேவையாக தற்போது இருக்கிறது. இதனை ஆரோக்கியமாக செய்தால் அனைவருக்கும் நன்மையே. என்ன மக்களே கட்டப்பையை எடுக்கும் சத்தம் கேட்குது!