தொழிலதிபர் கடத்தல்: மர்ம நபர்களை 48 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை

சென்னையில் தொழிலதிபரைக் கடத்தி வைத்துக்கொண்டு மிரட்டி 20 லட்ச ரூபாய் பணம் கேட்ட மர்ம நபர்களை காவல்துறையினர் 48 மணி நேரத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை வானகரத்தைச் சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி என்பவர் வட பெரும்பாக்கத்தில் சொந்தத் தொழில்நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த ஞாயிறு மாலை கிருஷ்ண மூர்த்தி தனது அலுவலகத்திலிருந்து காரில் ஏறி வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது புழல் – மதுரவாயல் சாலையில் செல்லும்போது இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மூன்று பேர் இவரது காரை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி அவரது குடும்பத்தினரிடம் 20 லட்ச ரூபாய் பணம் தர வேண்டும் எனச் செல்போனில் பேசச் சொல்லியுள்ளனர்.

அவரிடம் இருந்த ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபாயையும் பறித்துக் கொண்டனர். அதன் பிறகு கிருஷ்ணமூர்த்தியை இரவு முழுவதும் அடித்துத் துன்புறுத்திக் கும்முடிப்பூண்டி மேம்பாலம் அருகே இறக்கி விட்டுவிட்டுக் மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். இதுகுறித்துக் கிருஷ்ண மூர்த்தி புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தனிப்படை அமைத்து விசாரணை நடத்திய காவல்துறையினர், 150 கண்காணிப்புக் கேமராக்களை ஆராய்ந்து அதன் அடிப்படையில் மர்ம நபர்களை பிடிக்கத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். புழல் பகுதியில் மர்ம நபர்கள் பதுங்கி இருப்பதை அறிந்து அங்கு விரைந்து சென்று 4 பேரைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு இருசக்கர வாகனங்களையும், ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தையும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர்.

தலைமறைவாகி உள்ள செந்தில்குமார் என்பவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பிடிபட்ட நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திப் புழல் சிறையில் அடைத்தனர். குற்றவாளிகளைப் பிடித்த காவல்துறையினருக்குக் கிருஷ்ணமூர்த்தி நன்றி தெரிவித்தார்.

Exit mobile version