தமிழ்நாட்டில் புதிய தளர்வுகளின் படி 27 மாவட்டங்களில் பேருந்து சேவை தொடங்கியது. பெரும்பாலான மாவட்டங்களில் குறைவான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் அரசு பேருந்துகள் ஓடாததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். பழநி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு 22 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது ஒரு சில பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதால் மக்கள் கூட்டம் அலைமோதியது. விடுப்பில் உள்ள ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பணிக்கு திரும்பாததால் அரசு பேருந்துகளை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 788 பேருந்துகளில் 470 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பெரும்பாலான பேருந்துகள் 100 சதவீத பயணிகளுடன் இயக்கப்பட்டதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
விழுப்புரத்தில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டதால், பெரும்பாலான பேருந்துகள் காலியாக சென்றன. சென்னைக்கு அதிக பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், பிற மாவட்டங்களுக்கு குறைவான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட்டதால் அந்த மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
கடலூர் பேருந்து நிலையத்தில் பயணிகள் வருகை குறைவாக இருந்ததால், குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால், பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. விழுப்புரம் மற்றும் சென்னை பேருந்துகள் மட்டுமே பெருமளவில் இயக்கப்பட்டன.
இதே போல், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் பேருந்துகளில் குறைவான எண்ணிக்கையில் பொதுமக்கள் பயணம் மேற்கொண்டனர். இதனால், பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் காலியாக சென்றன.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் 75 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. பயணிகளின் வருகை பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் 60 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. பயணிகள் எண்ணிக்கையை பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.