சேலத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் இரண்டு அடுக்கு பாலம் கட்டும் பணிகளில் முடிவடைந்த பகுதிகளை வரும் 7ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.
சேலம் மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 320 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஏவிஆர் ரவுண்டானாவில் இருந்தும், குரங்கு சாவடியில் இருந்தும் தொடங்கும் இரண்டு பாலங்கள் ஐந்து ரோடு பகுதியில் இரண்டு அடுக்காக பிரிந்து ஒன்று மத்திய பேருந்து நிலையம் வழியாக நான்கு ரோடு வரையிலும், மற்றொன்று சாரதா கல்லூரி சாலை வழியாக ராமகிருஷ்ணா பார்க் பிரிவு ரோடு வரையிலும் கொண்டு செல்லப்படுகிறது. இந்த பாலம் கட்டுமான பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் முதல்கட்டமாக ராமகிருஷ்ணா சாலையில் இருந்து ஏறுமுகமாக கொண்டு அழகாபுரம் காவல் நிலையம் முன்பு இறங்கு முகமாக சுமார் ஒரு கிலோமீட்டர் நீலமும், இதற்கு இணையாக ஏவிஆர் ரவுண்டானாவில் இருந்து 5 ரோடு வழியாக சென்று ராமகிருஷ்ணா சாலை பிரிவு ரோட்டில் முடிவடையும் சுமார் 2 கிலோ மீட்டர் நீலம் கொண்ட பாலத்தின் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த நிலையில் இந்த பாலம் வரும் 7ம் தேதி போக்குவரத்திற்காக திறந்து விடப்பட உள்ளது. இந்த திறப்பு விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.
Discussion about this post