கடலூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, திமுக எம்.எல்.ஏ ஐயப்பன் 15 லட்சம் ரூபாய் கேட்பதாகவும், கட்சிக்காக உழைப்பவர்களை புறக்கணிப்பதாகவும் திமுக நிர்வாகியே புகார் தெரிவித்துள்ளார்.
கடலூர் அடுத்த மாலுமியார்பேட்டையைச் சேர்ந்தவர் வி.வெங்கடேசன். திமுக வார்டு செயலாளராக இருக்கும் இவர், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.
அதில், உள்ளாட்சி தேர்தலில் 45வது வார்டில் போட்டியிடுவதற்காக திமுக எம்.எல்.ஏ ஐயப்பனிடம் 5ஆயிரம் ரூபாய் டெபாசிட் கட்டிய நிலையில், அவரோ, 15 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு சீட் ஒதுக்குவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அதேபோல் கட்சிக்காக உழைத்தவர்களை விட்டுவிட்டு, மற்றவர்களை வார்டு கவுன்சிலர் சீட்டுக்கு எம்.எல்.ஏ பரிந்துரை செய்வதாக புகார் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு சீட் வழங்க வேண்டும் என்றும், தனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு எம்.எல்.ஏ கோ.ஐயப்பனும், அவரைச் சேர்ந்தவர்களும் தான் காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
திமுகவில் சீட் வாங்க துட்டு கொடுக்க வேண்டும் என்னும் நிலையை திமுக நிர்வாகியின் புகார் கடிதமே அப்பட்டமாக்கி உள்ளது.