கலீஜ், டௌலட், பிசுக்கோத்; 'Madras Day'யை அதிரவைத்த ஹர்பஜன்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங். ஐபிஎல் சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பல வருடங்களாக விளையாடி உள்ளார். தற்போது, கேப்டன் தோனி இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த இரண்டு வருடங்களாக விளையாடி வருகிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து போட்டி குறித்து தமிழ் சினிமா படங்களின் வசனங்கள் மற்றும் பாடல்களைக் கொண்டு தமிழில் தொடர்ந்து ட்வீட் செய்து வந்தார். இதுமட்டுமல்லாமல், முழு தமிழனாகவே மாறிய ஹர்பஜன் சிங், தமிழர்களின் பண்டிகைகள் தினத்தன்றும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னை மாகாணம் உருவாகி 380 வயதை இன்று எட்டியுள்ள நிலையில், ஒவ்வொரு ஆண்டும் இன்றைய தினத்தை ‘Madras Day’ என்று அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பலரும் சென்னை குறித்த தங்களது நினைவுகளை பகிர்ந்து வரும் வேளையில், சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், ‘Madras Day’குறித்து ட்வீட் செய்துள்ளார். இதில், சென்னையின் வட்டார சொற்களாக அடையாளப்படுத்தப்படும் “கலீஜ், டௌலட், பிசுக்கோத் போன்ற பல வார்த்தைகளை நம்ம சென்னையை அலங்கரித்துள்ளது” என்றும், “ஆதார் கார்டு இல்லாதவங்களுக்கும் அட்ரஸ் நம்ம மெட்ராஸ் தாங்க” என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சென்னை என்பது “ஊர் பெயர்”…ஆனால் மெட்ராஸ் என்பது “உணர்ச்சி” என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version