கில்கிறிஸ்டின் ட்வீட்டால் கேள்விக்குறியான ஹர்பஜன் சாதனை

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்டின் ட்விட்டர் பதிவினால் ஹர்பஜன் சிங்கின் சாதனை கேள்விக்குறியாகியுள்ளது.

2001 ஆம் ஆண்டு இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற போட்டியில், ஹர்பஜன் சிங் வீசிய ஒரு ஓவரில் ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட், ஷேன் வார்னே ஆகியோர் அடுத்தடுத்த 3 பந்துகளில் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார்.

இந்நிலையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சாதனை தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் ஆடம் கில்கிறிஸ்டுக்கு தவறாக அவுட் கொடுக்கப்பட்டிருப்பதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்துள்ள கில்கிறிஸ்ட், நடுவரின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் டி.ஆர்.எஸ். முறை அப்போது இல்லையே என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், முதல் பந்தில் அவுட்டாகாமல் இருந்திருந்தால் நீண்ட நேரம் நின்று விளையாடி இருக்க முடியும் என்று நினைத்தீர்கள் போல எனக் கிண்டல் செய்து ஹர்பஜன் சிங் பதில் ட்வீட் செய்துள்ளார்.

 

Exit mobile version