காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இளம் பெண்ணுக்கு கழிவறையிலேயே பிரசவம் ஏற்பட்டு, பச்சிளம் குழந்தை கழிவறை தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தையை கழிவறை தொட்டிக்கு காவு கொடுத்த ஆத்திரத்தில் இளம் பெண்ணின் உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் தான் இவை.
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன். இவரது கர்ப்பிணி மனைவியான முத்தமிழ் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். பிரசவ வார்டில் இருந்த முத்தமிழ் கழிவறைக்கு சென்றபோது, அங்கேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை கழிவறை தொட்டியில் விழுந்ததால் செய்வதறியாது திகைத்த முத்தமிழ், கத்தி கூச்சலிட்டதால் செவிலியர்கள் தாமதமாக வந்து குழந்தையை மீட்டனர்.
அங்கு குழந்தை மருத்துவ நிபுணர்கள் இல்லாததால், குழந்தையை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்ப முடிவெடுத்தனர். இதற்காக 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் அளித்த நிலையில் சுமார் 2 மணி நேரம் தாமதமாக ஆம்புலன்ஸ் வந்துள்ளது.
இதையடுத்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட பச்சிளம் குழந்தை வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் இறந்த பச்சிளம் குழந்தை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கே மீண்டும் கொண்டு வரப்பட்டது.
பச்சிளம் குழந்தை இறந்ததால் ஆத்திரமடைந்த முத்தமிழின் உறவினர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து சென்ற போலீசார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்களிடமும் உறவினர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து குழந்தையின் சடலத்தை வீட்டிற்கு எடுத்து செல்ல அமரர் ஊர்தி உள்ளிட்ட எவ்வித அரசு உதவிகளும் தேவையில்லை என கோபத்துடன் கூறிய முத்தமிழின் உறவினர்கள், இறந்த பச்சிளம் குழந்தையை இருசக்கர வாகனத்திலேயே எடுத்து சென்றனர். முத்தமிழ்க்கு பிரசவ வலி ஏற்பட்டபோது அவருடன் இருக்க யாரையும் அனுமதிக்கவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் தான் பச்சிளம் குழந்தை உயிரிழந்ததாகவும், சம்பந்தப்பட்ட மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.