பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் இருக்கக்கூடிய ஒரு மசூதியில் தற்கொலைப் படைத் தீவிரவாதி நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் 47பேர் இறந்துள்ளனர். 150க்கும் மேற்பட்ட நபர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்கவா மாகாணத்தின் தலைநகர் பெஷாவர் ஆகும். நேற்று மதியம் இங்குள்ள மசூதியில் இசுலாமியர்கள் தொழுகை செய்துகொண்டு இருந்தனர். திடீரென்று அங்கு சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு நடந்தது. இதில் மசூதி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் அங்கே பதற்ற சூழ்நிலை ஏற்பட்டதால் காவல்துறையும் மீட்புத் துறையினரும் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
படுகாயம் அடைந்த 150 பேர்களிலும் 23 பேர் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. மேலும் இந்த குண்டுவெடிப்பு நடைபெற்ற மசூதி நகரின் காவல் துறை தலைமையகம் அமைந்துள்ள வளாகத்தில் உள்ளது. மேலும் இந்தத் தொழுகையில் காவல்துறையினர் பலர் பங்கேற்றுள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களில் காவல்துறையினரும் அதிகம் பேர் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனை செயல்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த பெஷாவர் நகரம் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி உள்ளதால், தீவிரவாத தாக்குதல்கள் அடிக்கடி நடந்து வருகிறது என்று கூறுகிறார்கள். தாலிபான்கள் இந்தத் தாக்குதல்களை நிகழ்த்தியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
ஏற்கனவே கடந்த ஆண்டு பெஷாவரில் ஷியா முஸ்லீம் பிரிவினரின் மசூதி ஒன்றில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. அதில் 58 பேர் இறந்தனர். அதற்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்புப் பொறுப்பேற்றுக் கொண்டது. ஆனால் தற்பொது நடந்த தாக்குதலுக்கு இன்னும் எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. மேலும் இச்சம்பவத்தினை செய்தவர்கள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த டிடிபி அமைப்பினராக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அவர்களுக்கும் காவல்துறைக்கும் சமீப காலமாக தொடர்ந்து சண்டைகள் நடைபெற்று வருகின்றன. இந்த காலகட்டம் பாகிஸ்தானின் மோசமான காலகட்டமாகும். அவர்களுக்கு அங்கே பொருளாதார வீழ்ச்சியானது ஏற்பட்டு மிகவும் பின்னடைவில் உள்ளனர். இந்த சமயம் பார்த்து பெஷாவரில் இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post