உளி தாங்கும் கற்கள்தானே… மண்மீது சிலையாகும்… பார்வையற்ற மாற்றுத்திறனாளியின் சாதனைச் செயல்!

பார்வையற்ற மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளாக மின்சாதனப் பொருட்களை திறம்பட பழுது நீக்கி வருவது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது. கோவையைச் சேர்ந்த அந்த மாற்றுத்திறனாளி குறித்து பார்ப்போம்.

ஒளிமிகுந்த விழிகளுடன் செய்ய வேண்டிய மின்சாதனப் பொருட்கள் பழுதுநீக்கும் தொழிலை, தன் முயற்சியாலும் பயிற்சியாலும், அக ஒளியின் எழுச்சியாலும் செய்து வருகிறார் பார்வைத்திறனற்ற மாற்றுத் திறனாளி இளைஞரான கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சுரேஷ்குமார்.

2 வயதில் தாக்கிய மூளைக்காய்ச்சலின் பாதிப்பால் 6வயதில் சுரேஷ்குமாரின் பார்வை பறிபோனது. வறுமைக்கு வாக்கப்பட்ட குடும்பத்தில் இருந்து, எடுக்கப்பட்ட முயற்சிகளும் சுரேஷ்குமாருக்கு பார்வையை தந்துவிடவில்லை. இதனால் தொண்டாமுத்தூரில் உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியில் பயின்று வந்தவர், தந்தை மறைவைத் தொடர்ந்து அங்கு செல்வதும் தடைபட்டது.

வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்காமல் மின்சாதனப் பொருட்களை தன்முனைப்பில் பழுது நீக்க முயற்சித்தவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு கோவை சரவணம்பட்டியில் குடும்பத்தோடு குடியேறியிருக்கிறார்கள். தம்பியின் ஆர்வத்தை தட்டிக்கொடுத்த சகோதரி ரேவதி, அந்தப் பகுதியில் உள்ள எலக்ட்ரிக் கடையில் வேலைக்கு சேர்த்துவிட்டுள்ளார். கடை உரிமையாளரும், சுரேஷ்குமாருக்கு சிறிது சிறிதாக மின்சாதனப் பொருட்கள் பழுது பார்ப்பதை கற்றுத் தந்துள்ளார்.

இப்படியாக 2 கடைகளில் 10 வருடங்களாக இந்த தொழிலைக் கற்றுக் கொண்டவர் தனியாக யாருடைய உதவியும் இல்லாமல் மிக்ஸி, குளிர்சாதன பெட்டி, மின் விசிறி, வாசிங் மெசின், அயன் பாக்ஸ், ரேடியோ உள்ளிட்ட அனைத்து வகையான மின் சாதன
பொருட்களையும் பழுது பார்க்கும் பணிகளை செய்யத் தொடங்கினார்.

கடந்த 6 மாதங்களாக, தனது சகோதரியின் ஏற்பாட்டில் கவுண்டம்பாளையத்தில் தனியாகவே மின்சாதன பழுதுநீக்கும் கடையைத் தொடங்கியிருக்கிறார். அதற்கு நண்பர்களும் உறுதுணையாக இருந்து வருகின்றனர். இதன்மூலம் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும், தன்னம்பிக்கை நாயகனாவும் இருந்து வருகிறார்.

பயிற்சியின் போதும், தற்போது பணியில் ஈடுபடும்போதும் பலமுறை மின்சாரம் தாக்கியிருப்பதாகவும், ஆனாலும் அச்சமின்றி அதன் மூலம் வயர்களின் கனெக் ஷனை அறிந்து சரி செய்வதாகவும் தெரிவிக்கிறார் சுரேஷ்குமார். மின்சாரத் தாக்குதலை தாங்கிக் கொள்ள முடிந்தவரால், குடும்பத்தில் நிலவும் பொருளாதார தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணமுடியவில்லை. கடை, வீடு என வாடகை செலுத்தி வரும் சுரேஷ்குமாரால், பெரியநாயக்கன்பாளையம் அரசு குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்ட நிலையில் அதற்கான கட்டணம் கட்டமுடியாமல் திணறி வருகிறார். மாவட்ட ஆட்சியரோ அல்லது முதலமைச்சரோ தங்களுக்கு அந்த வீடு கிடைப்பதற்கு உதவி புரியுமாறு சுரேஷ்குமார் விடுத்துள்ள கோரிக்கைக்கு விடிவு கிடைக்கட்டும்.

Exit mobile version