மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. பிரமுகர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, பா.ஜ.க.-வினர் நடத்திய பேரணி வன்முறையில் முடிந்தது.
மேற்கு வங்க மாநிலம், டைட்டாகர் (TITAGARH) நகராட்சி கவுன்சிலரும், பா.ஜ.க. பிரமுகருமான மனீஷ் சுக்லா, கடந்த 4ஆம் தேதி காவல் நிலையம் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பா.ஜ.க.-வினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.-வினர் கொல்லப்படுவது தொடர் கதையாகி வருவதாகக் கூறி, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பா.ஜ.க.-வினர் பேரணி நடத்தினர். தலைநகர் கொல்கத்தா மற்றும் ஹவுரா போன்ற இடங்களில் நடைபெற்றப் பேரணியில் காவல்துறையினருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் வன்முறையாக மாறியதால், காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர்.
இதனிடையே, ஜனநாயக வழியில் நடைபெற்றப் பேரணியை மம்தா அரசு வன்முறைக் களமாக மாற்றியுள்ளதாக அம்மாநில பா.ஜ.க. தலைவர் கைலாஷ் வர்கியா தெரிவித்துள்ளார். மாநிலத்தின் பல்வேறுப் பகுதிகளில் வன்முறை சம்பவம் நிகழ்ந்து வருவதால், ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Discussion about this post